திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட 25 திட்டப்பணிகளை ஒரே நாளில் அவசர அவசரமாக திறந்த அமைச்சர்: விசிக அமைச்சர், அதிமுக, பாமக, திமுக எம்எல்ஏக்கள் புறக்கணிப்பு

 

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் தொடங்கிய 25 திட்டப்பணிகளை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியை விசிக அமைச்சர், அதிமுக, பாமக, திமுக எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். விழுப்புரம் மாவட்டத்திற்கு ஊரகவளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே துறை அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் மேற்கொண்ட நிலையில் நேற்று மீண்டும் அரசு நிகழ்ச்சிக்காக வந்தார்.

அப்போது, விழுப்புரம், விக்கிரவாண்டி, மயிலம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டப்பட்ட 25 திட்டப்பணிகளை முடிக்காமலேயே அவசர, அவசரமாக திறந்து வைத்தார். இதில் ஊரகவளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை சார்பில் சுகாதார கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மேல்நிலைநீர்தேக்கதொட்டி, கணினி ஆய்வகக்கட்டிடம், கல்லூரி கட்டிடம், அரசுப்பள்ளி கட்டிடம், கழிப்பறைகட்டிடம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தார். அமைச்சர் வருகைக்காக பல இடங்களில் அங்கன்வாடியில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நீண்டநேரம் காக்கவைக்கப்பட்டனர்.

கொய்யாதோப்பு பகுதியில் அங்கன்வாடி மையம் திறப்புவிழாவிற்கு அமைச்சர் வருவார் என்று எதிர்பார்த்து நீண்டநேரம் காத்திருந்தும் வராததால் ஊராட்சிமன்ற தலைவர் இக்கட்டிடத்தை திறந்துவைத்தார். திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவான விசிக அமைச்சர் வன்னியரசு மற்றும் மயிலம்தொகுதி அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம், விக்கிரவாண்டி தொகுதி பாமக எம்எல்ஏ சிவக்குமார், விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன் ஆகியோர் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர்.

* 4 லட்சம் லஞ்சம் கேட்குறாங்க…மூதாட்டி புகார்

மயிலம் அடுத்துள்ள நெடிமொழியனூர் கிராமத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம், மூதாட்டி ஒருவர் ‘‘எனது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு இங்குள்ள அதிகாரிகள் 4 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்கின்றனர், நான் என்ன செய்வது’’ என பரிதாபமாக கேள்வி எழுப்பினார். அதற்கு அவர, ‘‘காசு யார் கேட்டது. உன் புள்ள முதலமைச்சர் இருக்கில்ல. காசு கேட்குறத தெரிஞ்சா பிச்சி எடுத்துடுவாரு’’ என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

* முதல்வர் விஜய் கர்நாடக பயணம் குறித்து கேள்வி ஆளவிடுங்க சாமின்னு புஸ்ஸி ஓட்டம்

விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும்போதெல்லாம் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஏதாவது ஒரு கோயிலில் தரிசனம் செய்துவிட்டு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன்படி நேற்று கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் உள்ள கோயிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு வந்தார். அப்போது செய்தியாளர்கள் காவிரி விவாகரம் குறித்து பேட்டி கேட்டபோது, கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என்றார். இருப்பினும் செய்தியாளர்கள், முதல்வரின் கர்நாடகா பயணம் குறித்த கேள்விக்கு மட்டும் பதிலளிக்குமாறு கேட்டபோது ஆளவிடுங்கடா சாமி என்றவாறு கையெடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

 

Related Stories: