கறிக் கோழிகளுக்கு தீவனக்கட்டுப்பாடு கோரி வழக்கு

 

மதுரை: புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜ் முகமது, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி, கோழிகளை விற்பனைக்குக் கொண்டு செல்லும்போது அவற்றின் குடல் சுத்தமாகவும், பாக்டீரியா போன்ற தொற்றுப் பாதிப்புகள் இல்லாமலும் இருக்க, பயணத்திற்கு முன் குறைந்தது 8 மணி நேரம் தீவனம் எதுவும் கொடுக்கக் கூடாது. ஆனால், கோழிகளின் எடையைச் செயற்கையாக உயர்த்தும் நோக்கத்தோடு வாகனங்களில் ஏற்றுவதற்கு முன்பு வரை தீவனம் கொடுக்கின்றனர்.

இது தீவிர சுகாதாரக்கேடுகளுக்கு வழிவகுக்கிறது. கோழிகளின் நலன் மற்றும் நுகர்வோரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 8 முதல் 12 மணி நேரத் தீவனக் கட்டுப்பாட்டை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோழிப் பண்ணைகளிலும் அமல்படுத்துமாறும், இதனை கண்காணிக்க கண்காணிப்புக் குழுக்களை அமைக்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர், மனுவிற்கு கால்நடை மருத்துவ சேவைகள் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆக. 8க்கு தள்ளி வைத்தனர்.

 

Related Stories: