மசினகுடி- தெப்பக்காடு சாலையோரம் குட்டிகளுடன் வலம் வரும் காட்டு யானைகள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் சாலையோரம் குட்டியுடன் யானைகள் கூட்டம் வலம் வருவது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் சில நாட்கள் அவ்வப்போது பெய்த மழையால் வனப்பகுதி முழுவதும் பச்சை பசேலென காட்சியளிக்கிறது. இதனால் கடந்த ஜனவரி மாதம் வறட்சி ஏற்பட்டபோது உணவு, தண்ணீர் தேடி இடம் பெயர்ந்த யானைக் கூட்டங்கள் தற்போது முதுமலையில் பசுமை திரும்பியதால் சாலை ஓரங்களில் வலம் வரத் துவங்கியுள்ளன.

இதனால் கூட்டம் கூட்டமாக யானைகள் முதுமலையில் உலா வரும் நிலையில், மசினகுடி – தெப்பக்காடு சாலை ஓரத்தில் குட்டியுடன் காட்டு யானை கூட்டம் அடிக்கடி வலம் வருகிறது. இதனை அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டுரசித்தனர். தற்போது அதிக அளவு யானைகள், கரடிகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாலை ஓரங்களில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

அதே சமயம் இதுபோன்று வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு இறங்குவதால் விபத்து அபாயமும் தொடர்கிறது. இதனை கண்காணிக்க மசினகுடி முதல் தெப்பக்காடு வரையில் உள்ள சாலையில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: