ஏமாற்றியது தென்மேற்கு பருவமழை; காய்கறிகளை பாதுகாக்க லாரி தண்ணீர் வாங்கி பாய்ச்சும் விவசாயிகள்

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் இறுதியில் துவங்கியது. சில நாட்கள் மட்டுமே பெய்த நிலையில், எல்-நினோவின் தாக்கம் காரணமாக அதன் பின் மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகள், குடிநீர் ஆதாரமாக உள்ள நீரோடைகள், குளங்கள் போன்றவை வறண்டுள்ளன. இதனால் பல இடங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மலை காய்கறி விவசாயத்திற்காக பயன்படும் அனைத்து ஆறுகள், குட்டைகள், நீருற்றுகள் காய்ந்துபோய் உள்ளதால், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல விவசாயிகள் மலைப் பாங்கான பகுதிகள் மற்றும் சரிவுகளில் விவசாயம் மேற்கொள்ளாமல் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தாழ்வான பகுதிகளில் கூட போதிய தண்ணீர் இன்றி சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயம் செய்திருந்த விவசாயிகள் தங்கள் காய்கறி பயிர்களை காக்கும் வகையில் லாரி தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி வந்து பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். குறிப்பாக காரபிள்ளு, குளிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் லாரி மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

நகருக்கு அருகாமையில் உள்ள விளை நிலங்களுக்கு ஒரு லோடு சிறிய லாரி தண்ணீர் ரூ.3 ஆயிரம் வரையிலும் தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. சற்று தொலைதூர கிராமங்களுக்கு சென்றால், அந்த பகுதிக்கு செல்லும் தூரத்திற்கேற்ப அதிகமாகும். குறிப்பாக அறுவடைக்கு குறைந்த நாட்களே உள்ள காய்கறி பயிர்களை விவசாயிகள் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீரை ரூ.6 ஆயிரம் வரையிலும் 7000 லிட்டர் தண்ணீரை ரூ.4 ஆயிரம் வரை பணம் கொடுத்து வாங்கி பாய்ச்சி வருகின்றனர். ஆனால் ஒரே நேரத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் பற்றாக்குறையும், லாரிகளுக்கு கிராக்கியும் ஏற்பட்டுள்ளது. ஏக்கர் கணக்கில் தோட்டம் வைத்துள்ளவர்கள் ஒரு நாளுக்கு மூன்று முதல் 5 லோடு வரை தண்ணீர் வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சுக்கின்றனர். இதனால், நாள் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. நஷ்டம் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தொிவிக்கின்றனர்.

Related Stories: