திருச்செங்கோடு திருநங்கையுடன் ஆவடி ஐடி ஊழியர் டும்..டும்..டும்.. பெற்றோர் எதிர்ப்பை மீறி சுயமரியாதை திருமணம்

கோபி: கோபியில் பெற்றோர் எதிர்ப்பை மீறி ஐடி ஊழியர் திருநங்கையை திருமணம் செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள மோரை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்ராஜ் (30). ஐடி ஊழியர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியை சேர்ந்தவர் கயல்விழி (திருநங்கை). இவர், 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் மூலம் பிரவீன்ராஜூக்கும் திருநங்கை கயல்விழிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து, பிரவீன்ராஜ் தனது காதல் விவகாரத்தை வீட்டில் தெரிவித்தார். ஆனால், அவரது பெற்றோர் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, இருவரும் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு, இருவரும் தங்களது பணிகளை தொடர சென்றனர். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகையின் போது வீட்டிற்கு சென்ற பிரவீன்ராஜை, கயல்விழியிடம் இருந்து பிரிப்பதற்காக அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி, பிரவீன்ராஜை சென்னையில் உள்ள ஒரு தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கட்டாயப்படுத்தி சேர்த்து, சுமார் 2 ஆண்டுகள் அங்கேயே வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் பிரவீன்ராஜை மீட்பது போல் வீட்டிற்கு அழைத்து வந்த குடும்பத்தினர், அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகளை செய்ய பெண் பார்க்க தொடங்கினர். இந்த விபரம் அறிந்த பிரவீன்ராஜ், உடனடியாக தனது மனைவியான திருநங்கை கயல்விழிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் நேற்றுமுன்தினம் வீட்டை விட்டு வெளியேறி, கோபியில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தை அணுகினர்.

அங்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சென்னியப்பன் மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில், மாலை மாற்றி சுயமரியாதை பதிவுத்திருமணம் செய்து கொண்டனர். பெற்றோரின் தடைகளையும், எதிர்ப்புகளையும் தாண்டி திருநங்கையை கரம் பிடித்த வாலிபரின் இச்செயல் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: