விற்பனையாளர்கள் நாளை ஒருநாள் ஸ்டிரைக் அறிவிப்பு; தமிழ்நாட்டில் 6 லட்சம் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்: ரூ.9 கோடி வர்த்தகம் முடங்கும் அபாயம்

தஞ்சாவூர்: தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்தாததை கண்டித்து விற்பனையாளர்கள் நாளை ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்டிரைக்கால் தமிழகத்தில் 6 லட்சம் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்படுவதால் சுமார் ரூ.9 கோடி வர்த்தகம் முடங்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாட்டில் நாமக்கல், சேலம், பல்லடம் மற்றும் கோயம்புத்தூர் சுற்றியுள்ள பகுதிகள் கோழிப்பண்ணை தொழிலுக்கு தலைமை தாங்குகின்றன. கறிக்கோழிகள் பொதுவாக 35 முதல் 40 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து விற்பனைக்கு தயாராகின்றன.

கிராமப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெரிய மற்றும் சிறிய பண்ணைகளில் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் சேலம் ரோடு, பரமத்தி ரோடு, மோகனூர், திருச்செங்கோடு ரோடு மற்றும் பெரியப்பட்டம் போன்ற பகுதிகள் கோழி மற்றும் முட்டை உற்பத்திக்கு முக்கிய இடங்களாக உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 1,100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் 7 கோடிக்கும் மேல் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

தினசரி 5 கோடிக்கும் அதிகமான முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்குள்ள பண்ணைகளில் இருந்து முட்டை உற்பத்தி காலம் முடிந்த கோழிகளும், இறைச்சிக்கான பிராய்லர் கோழிகளும் லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் உள்ளூர் சந்தைகளுக்கு தேவைக்கேற்ப அனுப்பப்படுகின்றன.

கோழி வளர்ப்போரும், உற்பத்தி நிறுவனங்களும் மட்டுமே லாபம் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கோழிகளுக்கு அதிகப்படியான தீவனத்தை வழங்கி கழிவுகளும், தரமற்ற இறைச்சியுமே நுகர்வோரை சேரும் நிலை உள்ளது. இதனால் வியாபாரிகளுக்கும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மாநிலம் முழுவதும் இதே நிலை உள்ளது. தீவனம் முழுவதுமாக கொடுத்து வாகனத்தில் ஏற்றினால் செல்லும் வழியெங்கும் கோழியின் கழிவுகள் சிதறும். சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. வாகனத்திலும் கோழிக்கழிவுகள் மலைபோல சேகரமாகும்.

துர்நாற்றம் வீசுகிறது. கோழியை இறைச்சிக்கு வெட்டும்போது அதிக கழிவுகள் இறைச்சியுடன் கலந்து இறைச்சியின் தரத்தையும் குறைக்கிறது. இது மட்டுமல்லாது கோழி உற்பத்தியாளர்கள் கணிசமான லாபம் பெறுவதற்காகவே தீவனத்தை அதிகப்படியாக கோழிகளுக்கு வழங்குகின்றனர். ஒரு கிலோ தீவனம் ரூ.50 என்றால் அதை கோழியின் வயிற்றுக்குள் உணவாக செலுத்தினால் கோழியின் எடையில் ஒரு கிலோ கூடும். இதனால் கோழியின் விலை இறைச்சி விலைக்கு ஈடாக மாறும். இதன் மூலம் கோழி உற்பத்தியாளர்களுக்கு ரூ.100 கூடுதல் லாபம் கிடைக்கிறது.

ஆனால் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கும், கோழிகளை கையாளும் நபர்களுக்கும் கழிவுகளால் பெரிதும் சுகாதார கேடு ஏற்படுகிறது. நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. இறைச்சி விற்பனையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதுடன், நுகர்வோருக்கும் தேவையற்ற விலை உயர்வு திணிக்கப்படுகிறது.
இதனையடுத்து சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், சுகாதாரம் மேற்படுத்தவும், கோழி கழிவுகளை அகற்றும் நவீன கூடங்களை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவிட அரசு அனுமதி அளிக்க வேண்டும்,

கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்தாதை கண்டித்தும் 31ம் தேதி (நாளை) கோழி இறைச்சி விற்பனையை நிறுத்த வணிகர்கள் முடிவு செய்திருக்கின்றனர். உற்பத்தியாளர்கள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த போராட்டம் காலவரையற்ற போராட்டமாக மாறுக்கூடும் என்ற அறிவிப்பால் அசைவ பிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் துரைராஜ் கூறியதாவது: கடந்த 2024ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் தீவன கட்டுப்பாடு வழிமுறைகள் வெளியிடப்பட்டது. வழிமுறைகள் வெளியிட்ட பிறகும் கால்நடை துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் மெத்தனமாக செயல்பட்டு வருகின்றனர். எந்த ஒரு உற்பத்தி நிறுவனமும் கடைப்பிடிப்பதில்லை. கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு நெறிமுறைகளை செயல்படுத்தாததால் கோழிக்கறி விற்பனையை நிறுத்த வணிகர்கள் முடிவு செய்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள வணிகர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்திலும் கோழி விற்பனை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

இந்த போராட்டத்தால் தமிழகத்தில் சுமார் 60,000 கடைகளும், புதுச்சேரியில் சுமார் 20,000 கடைகள் என மொத்தம் 80,000 கடைகள் மூடப்பட உள்ளது. தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 6 லட்சம் கறிக்கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுவதால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு கிலோ உயிர் கோழி ரூபாய் 150க்கு வாங்கப்படுகிறது. இந்த ஒரு நாள் போராட்டம் அறிவிப்பால் தமிழகத்தில் 6 லட்சம் கறிக்கோழி விற்பனை நிறுத்தப்பட உள்ளது. இதனால் சுமார் ரூ.9 கோடி கறிக்கோழி வர்த்தகம் முடங்கும் அபாயம் உள்ளது. இதனால் தமிழக அரசு, உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேசி இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

* கறிகோழிக்கு தீவன கட்டுப்பாடு தொடர்பாக உற்பத்தியாளர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்த போராட்டம் காலவரையற்ற போராட்டமாக மாறுக்கூடும்

Related Stories: