விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் பசுபதி அணியினரிடையே உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், பெண் நிர்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி மதிவாணனிடம் சி.வி.சண்முகம் புகார் மனுவை நேற்று அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சமீபகாலமாக குறிப்பிட்ட சில நபர்களால் பெண்களை குறிவைத்து, குடும்ப பெண்கள், திருமணமானவர்கள், கல்லூரி பெண்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மானபங்கபடுத்தி பொய்யான, அவதூறான செய்திகள் அச்சுறுத்துகிற வகையில் பரப்பி வருகிறார்கள். இதனால் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு மிகப்பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. முதலமைச்சர் என்ன சொல்கிறார். பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள். பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிங்கப்பெண் என்ற படையை உருவாக்கியிருக்கிறார்.
ஆனால் இங்கு விழுப்புரம் மாவட்டத்தில் என்ன நிலமை. பெண்கள் தைரியமாக பொதுவாழ்க்கைக்கு வரமுடியாது. அச்சப்படுகிறார்கள், பயப்படுகிறார்கள். பல காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நான் வழக்கறிஞர், சட்டஅமைச்சராகவும் இருந்துள்ளேன். இதுகுறித்து கேட்டால் எஸ்பி சொல்கிறார், உங்களுக்கு சட்டம் தெரியும், 7 ஆண்டு தண்டனை வரை உள்ள குற்றவழக்குகளில் முதலில் சிஎஸ்ஆர் கொடுப்போம்.
பின்னர் விசாரணை நடத்தி அரசு வழக்கறிஞரிடம் கருத்துகேட்டு, அவர் சொன்னால் வழக்குபதிவு செய்வோம். கைது செய்வீர்களா என்று கேட்டால், ேதவைப்பட்டால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம் என்கிறார். அப்படியென்றால் 7 ஆண்டுகளுக்கு கீழ் உள்ள குற்ற வழக்குகளில் உள்ளவர்கள் காவல்துறை அறிவுறுத்தலின்படி யாரும் பயப்படதேவையில்லை.
சுதந்திரமாக திரியலாம் என்று குற்றவாளிகளுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார். சிறப்பான எஸ்பியை நியமித்ததற்கு முதல்வருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இப்படிப்பட்ட பதிலை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கு உரிய அறிவுரை வழங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து நாங்கள் என்ன செய்வோம் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
