பழநியில் ரூ.100 கோடி நில மோசடி நடந்த அதே நாளில் ரூ.60 கோடி அரசு புறம்போக்கு நிலம் முறைகேடாக ரூ.20 லட்சத்துக்கு பாஜ நிர்வாகிக்கு பத்திரப்பதிவு: சார் பதிவாளர் ஜஸ்டின் மீது புதிய குற்றச்சாட்டு

பழநி: பழநியில் ரூ.60 கோடி மதிப்பிலான அரசு புறம்போக்கு நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக நிலமோசடி வழக்கில் சிக்கிய ஜஸ்டின் மணிகண்டன் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே நெய்க்காரப்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் (63) தனது மகன் மனோஜ்குமாருக்கு (33) பழநி டவுன், 4வது வார்டு பிளாக் 49ல் சர்வே எண் 2/3க்கு கட்டுப்பட்ட 1.66 ஏக்கரை தான செட்டில்மென்ட்டாக பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்த பதிவிற்கு 1437/2026 என்று பத்திரப்பதிவுத்துறையால் எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு கடந்த ஜூலை 6ம் தேதி நடந்தது. அந்த நாளில் தான் ரூ.100 கோடி மதிப்புள்ள பழநி மடத்தின் நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்டது. இதே நாளில், தான செட்டில்மென்ட்டாக பதிவு செய்யப்பட்ட நிலத்தில் 55 சென்ட் இடத்தை மனோஜ்குமார், பழநி அருகே பெரியம்மாபட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் பாஜ மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினராக உள்ள சவுந்திரபாண்டியனுக்கு (31) ரூ.20 லட்சத்திற்கு கிரையம் பேசி ரூ.1 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார்.

இந்த பதிவிற்கு பத்திரப்பதிவுத்துறையின் சார்பில் 1438/2026 என்று எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பத்திரங்களும் ஒரே நாளில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிலம் அரசு புறம்போக்கு நிலம் என பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தும், உரிய ஆவணங்களை முழுமையாக சரிபார்க்காமல் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து பழநி நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி கூறுகையில், ‘‘பிரச்னைக்குள்ளான அந்த இடம் நகராட்சிக்கு சொந்தமானது. குப்பைக் கிடங்கிற்கு இடம் வழங்கியதற்காக மாற்று இடமாக வழங்கப்பட்ட இடம். இந்த இடம் இன்னும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைப்பு செய்யப்படாமல் உள்ளது. இந்த இடம் தொடர்பாக நீதிமன்ற வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த இடத்தின் மதிப்பு ரூ.60 கோடி ஆகும்.

இந்த இடத்திற்கு போலியாக உயில் தயாரித்து, அபகரிக்கும் முயற்சி நடந்துள்ளது. இந்த இடத்திற்கான பத்திரப்பதிவும், ரூ.100 கோடி நிலம் மோசடியாக பதிவு செய்யப்பட்ட அதே நாளில் தான் நடந்துள்ளது. அந்த நாளில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும், பத்திரப்பதிவுகளையும் அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அதில் முறைகேடுகள் அல்லது மோசடிகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பத்திரங்களை சட்டப்படி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு உறுதிசெய்யப்பட்டால் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்’’ என்றார்.

* மதிப்பீட்டிலும் குளறுபடி
ரவிச்சந்திரன் தனது மகன் மனோஜ்குமாருக்கு எழுதி கொடுத்த தான செட்டில்மென்ட்டில் 1.66 ஏக்கர் இடத்தின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 67 லட்சத்து 36 ஆயிரம். அவரின் கணக்கீட்டின் படி ஒரு சென்ட்டின் மதிப்பு ரூ.1.60 லட்சம். இதன்படி பார்த்தால் விற்பனை செய்யப்படும் 55 சென்ட்டின் மதிப்பு ரூ.88.58 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால், இதனை வெறும் ரூ.20 லட்சத்திற்கு மட்டுமே மனோஜ்குமார் கிரையம் செய்து கொடுத்துள்ளார். இந்த முரண்பாடுகள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories: