சீமான் மீது அவதூறு பரப்பிய யூடியூபர்கள் மீது 5 பிரிவில் வழக்கு: ஐகோர்ட் கிளையில் போலீசார் தகவல்

மதுரை: ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி சீமானை விமர்சித்த யூடியூபர்கள் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து வலைப்பேச்சு மீடியாவை சேர்ந்த பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் உள்ளிட்டோர் தரக்குறைவாகவும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியும், களங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

காவல்துறை உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, ‘‘முதலமைச்சர் குறித்து திமுக எம்எல்ஏ பேசினால், உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்வீர்கள்? அதற்கு உங்களிடம் அதிகாரம் உள்ளது. சீமானை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு அரசியல்வாதி.

தவிர்க்க முடியாத தலைவர். காவல்துறை பாரபட்சம் பார்க்கிறதா? ஒரு தலைவர் குறித்து அவதூறாக பேசுவதை வேடிக்கை பார்க்க முடியாது. சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சீமான் குறித்த அவதூறு வீடியோக்களை நீக்க வேண்டும்’’ என உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எல்.விக்டோரியா கவுரி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘சீமானுக்கு எதிராக அவதூறு கருத்துக்களையும் ஆதாரமற்ற தகவல்களையும் பரப்பிய யூடியூபர்கள் தமிழன் கோகுல், பிஸ்மி ஆகியோர் மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிஎன்எஸ் பிரிவுகள் 192 (கலவரத்தை தூண்டும் நோக்கில் ஆத்திரமூட்டுதல்), 296-பி (பொது இடத்தில் அசிங்கமாக பேசுதல்), 352 (பொது அமைதியை மீறும் நோக்கில் திட்டமிட்டு அவமதிப்பது), 353 (1) (பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்தி மற்றும் தவறான தகவல் பரப்புதல்) மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு 67ன்படி வழக்கு பதியப்பட்டுள்ளது’’ என மதுரை சைபர்கிரைம் போலீசார் தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி மனுவை முடித்து வைத்தார்.

Related Stories: