காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று நடைபெற இருந்த ஆடி கருட சேவை உற்சவம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் ஆடி கருட சேவை உற்சவம் ரத்து செய்யப்பட்டது குறித்து கோவில் நிர்வாகத்தில் விசாரித்த போது உற்சவரான வரதராஜ பெருமாளுக்கு கடந்த மூன்றாம் தேதி ஜேஷ்ட்டாபிஷேகம் நடைபெற்ற போது உற்சவர் வரதராஜ பெருமாள் சிலை இருந்த கவசங்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று உள்ளது.
கோவில் பட்டாச்சாரியார் பெருமாள் சிலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது பெருமாள் சிலை சேதமடைந்தது தெரியவந்துள்ளது.அதன் அடிப்படையில் உற்சவர் சிலையை சீரமைப்பதற்காக அரசிடமிருந்து பல்வேறு கட்ட அனுமதிகள் பெறுவதற்கான நடைமுறைகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சேதமடைந்துள்ள உற்சவர் சிலையை சீரமைப்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆணையர், அமைச்சர் என பல்வேறு கட்ட அனுமதிகள் பெறுவதற்கான காலதாமதமாகி வருவதால் தான் ஆடி கருட சேவை உற்சவம் நடத்த முடியாமல் போனது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆடி கருட சேவை ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
