சென்னை: தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் 152 அரசு மருத்துவர்களுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் சட்ட மற்றும் நிர்வாகத் தோல்வியாகும். இது, அரசு மருத்துவர்களின் உரிமைகள் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையும் உயர்சிறப்பு மருத்துவச் சேவையையும் பாதுகாப்பதில் அரசின் அலட்சியமான அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை இழப்பது என்பது வெறும் அரசு மருத்துவர்களுக்கான இழப்பு அல்ல; எதிர்காலத்தில் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 152 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழப்பதாகும். இந்தச் சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவர்களின் ஆழ்ந்த வேதனை, ஏமாற்றம் மற்றும் இந்த அரசின் செயல்பாடுகள் மீதான கடும் அதிருப்தியை அரசு மருத்துவர்கள் சார்பில் பதிவு செய்கிறோம் என தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ‘2ம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகு, நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் இருப்பின் அதனை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50% இடங்கள் உடனடியாக தமிழ்நாடு அரசிற்கே திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற வாதங்களை ஏற்று உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது,’ என தெரிவித்துள்ளார்.
