கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சென்னை – செய்யாறு இடையிலான 4 வழிச்சாலை திட்ட டெண்டர் ரத்து

சென்னை: சென்னை – செய்யாறு இடையே 43 கிலோ மீட்டருக்கு 4 வழிச்சாலை அமைப்பதற்காக, கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டரை தவெக அரசு ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு சிப்காட் தொழிற்பகுதியை சென்னையுடன் நேரடியாக இணைக்கும் வகையில், சுமார் 43.2 கிலோ மீட்டர் நீளத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டம், கடந்த திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம், சென்னை துறைமுகம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொழிற்பகுதிகளில் இருந்து செய்யாறு தொழிற்பேட்டைக்கு கனரக வாகனங்கள் தடையின்றி சென்று வருவதற்கான மாற்று சாலை வசதியை உருவாக்குவதாகும். திட்டத்திற்காக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 33 கிராமங்களில் மொத்தம் 619 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. சுமார் 60 மீட்டர் அகலத்தில் சர்வதேச தரத்தில் 4 வழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை விரிவான திட்ட அறிக்கையையும் தயாரித்திருந்தது.

தற்போது சென்னை மற்றும் அதன் புறநகர் தொழிற்பேட்டைகளில் இருந்து செய்யாறு நோக்கிச் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் வாலாஜாபாத், காஞ்சிபுரம், தூசி, மாமண்டூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாகவே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதிகளில் சாலைகள் குறுகலாக இருப்பதோடு, நகர்ப்புற போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால் சரக்கு வாகனங்கள் நீண்ட நேரம் சிக்கிக்கொள்கின்றன.

இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனங்கள் கூடுதல் போக்குவரத்து செலவு, காலதாமதம் போன்ற பிரச்னைகளை தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையை மாற்றும் வகையில் புதிய 4 வழிச்சாலை திட்டம் தொழில்துறையினர் மற்றும் வாகன ஓட்டிகளின் பெரும் எதிர்ப்பார்பாக அமைந்தது. மேலும் இத்திட்டத்தின் படி, சிங்கப்பெருமாள் கோவில், ஓரகடம் நெடுஞ்சாலையில் இருந்து புதிய சாலை தொடங்கி, பல கிராமங்கள் வழியாக நேரடியாக செய்யாறு சிப்காட் தொழிற்பகுதியை சென்றடையும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

இதன் மூலம் சென்னை முதல் செய்யாறு இடையேயான பயண நேரம் குறையும். அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தமிழகத்தின் முக்கிய தொழில் மண்டலங்களாக விளங்குகின்றன. ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தின் செய்யாறு சிப்காட் வளாகத்திலும் புதிய தொழிற்சாலைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. இந்த புதிய சாலை அமைந்தால், மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை விரைவாக கொண்டு செல்லும் வசதியடைவதுடன், புதிய முதலீடுகளை ஈர்க்கவும், தொழில் விரிவாக்கத்துக்கும் வழிவகுக்கும் என கருத்தி திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், திட்டத்திற்காக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. நிர்வாக காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மதிப்பீடு, திருத்தப்பட்ட செலவுத்திட்டம் மற்றும் தொழில்நுட்ப பரிந்துரைகளின் அடிப்படையில் மீண்டும் டெண்டர் கோரப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories: