பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

சென்னை: சென்னையில் எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடைகளை மேம்படுத்தவும், காலை உணவு திட்டத்தில் உப்புமாவுக்கு மாற்றாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை கொடுக்க வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறேன். நீதிக்கட்சி உணவை கொண்டு வந்தது. காமராஜர் ஆட்சி அதை மதிய உணவாக மாற்றியது. கருணாநிதி முட்டை கொண்டு வந்தார்.

எம்ஜிஆர் அதனை சத்துணவாக மாற்றினார். ஜெயலலிதா வாரந்தோறும் முட்டை கொண்டு வந்தார். இது மாதிரி பல மாற்றங்கள் இருந்தன. இதேபோல், பள்ளி மாணவர்களுக்கு மதியம் வழங்கப்படும் சத்துணவிலும் வாரத்துக்கு ஒரு முறை சிக்கன் பிரியாணி போடலாம் என நான் விரும்பினேன். அந்த கோரிக்கையையும் கேட்டுள்ளேன். இது பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டது. அதுகுறித்து பரிசீலிப்பதாக முதல்வர் சொல்லியுள்ளார்.

ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் தரவேண்டிய நிதியை வழங்காமல் இருக்கிறது. தமிழகத்தின் வருங்காலம் இதனால் பாதிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களை கூறி மொழி, கொள்கை பிரச்னைகளுக்காக ஒன்றிய அரசு நிதியை தடுப்பது ஏற்புடையதல்ல. அதை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்படும். நமது பட்ஜெட்டில் அதிக பணத்தை அரசுப் பள்ளிகளுக்காக செலவு செய்கிறோம். இவற்றை அறிவின் மீதான முதலீடாகவே பார்க்க வேண்டும்.

கடந்த ஆட்சியாளர்களின் நல்ல திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது. அம்மா உணவகத்தில் உணவுத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. நல்ல திட்டங்களில் இருக்கும் குளறுபடிகள் சரிசெய்யப்பட்டு தொடரும். தமிழ்த்தாய் வாழ்த்துக்குதான் எப்போதும் முதன்மை. நாங்கள் இதில் தெளிவாக இருக்கிறோம். தமிழக அரசு நடத்தும் அனைத்து விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலில் பாடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: