* அறக்கட்டளை சொத்து தனிப்பட்ட சொத்தாகாது- தலைமை நீதிபதி
சென்னை: சட்டமன்ற தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்திலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில், திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதையும், அறக்கட்டளைக்கு சமீபத்தில் செங்கல்பட்டு அருகே 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் வாங்கியதை மறைத்துள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்தது குற்றம் என்றும் இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில் இதுசம்பந்தமாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் தான் கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், வேட்பு மனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும். அறக்கட்டளை சொத்துக்கள் தனிப்பட்ட சொத்துக்கள் ஆகாது. தனிப்பட்ட முறையில் இந்த சொத்துகளில் சம்பந்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை, என்றனர். இதையடுத்து வழக்கை திரும்பப்பெறுவதாக மனுதாரர் அனுமதி கோரினார். அதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
