சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட செல்லவிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை, அவரது அறைக்குள்ளேயே தடுத்து நிறுத்தி, லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்தி, புதிதாக கிடைத்த அதிகார வெறியை பயன்படுத்தி கொண்டிருக்கும் முதல்வர் விஜய்க்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவை தட்டிக் கேட்க முடியவில்லை.
பயிர்கடன் தள்ளுபடி கோரி போராடும் விவசாயிகளுக்கு பதில் சொல்லவும் முடியவில்லை. ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதை கேள்வி கேட்க துளிகூட திராணியற்று “டைவர்ஷன் பாலிடிக்ஸ்” மட்டுமே தங்களுக்கு தெரிந்த ஒரே நிர்வாகம் எனச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது தவெக அரசு.முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அறையில் நடைபெற்ற சோதனையின் முடிவில் “எந்த ஆவணங்களும் எடுக்கவில்லை” என்று எழுதிக் கொடுத்துவிட்டு போகிறது லஞ்ச ஒழிப்புத்துறை என்றால், அவசர அவசரமாக நள்ளிரவில் இந்த ரெய்டு திட்டமிடப்பட்டதா?.
யார் விருப்பத்தை நிறைவேற்ற இப்படி ரெய்டு நடத்தப்பட்டது?. கரூர் செல்வதற்கு முன்பு கைது செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், ஏற்கெனவே டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறையின் வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் டாஸ்மாக்கை வைத்தே இந்த பழிவாங்கல் நடவடிக்கை ஏன்?. டாஸ்மாக்கை தனியாருக்கு விடும் செய்தியை திசைதிருப்ப இந்த ரெய்டா? “மடியில் கனமில்லை. வழியில் பயமில்லை” என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ரெய்டு முடிந்ததும் பேட்டி கொடுத்திருக்கிறார்.
அவரை மட்டுமல்ல, திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, எஸ்.எஸ்.சிவசங்கர் எனத் தேடித் தேடி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் இந்த அரசு, தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவே இப்படி அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. இதனைப் பார்க்கும்போது, “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
அடக்குமுறைகளால் திமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்டவும் முடியாது. திமுகவை கடுகளவு கூட அச்சுறுத்த முடியாது என்பதை நேற்றுப் பெய்த மழையில் முளைத்த காளான்கள் தெரிந்து கொள்ள வேண்டும். திமுகவை மிரட்ட நினைத்தவர்கள் அரசியல் களத்திலிருந்தே காணாமல் போனதுதான் கடந்தகால வரலாறு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
