சென்னை: பிஆர்க் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. மாணவர்கள் பிடித்தமான கல்லூரியை தேர்வுசெய்ய இன்று மாலை 5 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. 2வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 93,119 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்நிலையில், பிஆர்க் எனப்படும் இளநிலை கட்டிடக்கலை படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
இதில் 1,423 மாணவர்கள் கலந்துகொள்கின்றனர். அண்ணா பல்கலைக்கழக கட்டிடக்கலை உள்பட 29 கட்டிடக்கலை கல்லூரிகளில் பிஆர்க் படிப்பில் உள்ள 925 இடங்களை நிரப்ப இக்கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வில் பங்கேற்றுள்ள மாணவர்கள் 30ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விருப்பமான கல்லூரிகளை வரிசைப்படி தேர்வுசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
