அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்த்தால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்: தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2500 மதுக்கடைகளை மட்டும் தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது கண்டிக்கத்தக்கதாகும்.  அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டுமே தவிர மதுக்கடைகளை தனியாரிடம் தாரை வார்க்க கூடாது. 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல, மாறாக சீர்கேடாகத் தான் கருதப்படும்.

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்தே, தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்குவதற்கும், வெளி மாநிலங்களில் இருந்து மதுவை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்கும் ஒரு லாபி தீவிரமாக முயன்று வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. இருப்பினும் தமிழ்நாட்டின் ஒற்றை அதிகார மையம் நான் தான் என்று முதல்வர் விஜய் மீண்டும் மீண்டும் கூறி வந்ததால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்று மதுவிலக்கு ஆதரவாளர்கள் நம்பினார்கள்.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்.சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இன்னும் அதிக அளவில் மதுவுக்கு அடிமையாவார்கள். அப்படியொரு நிலை ஏற்பட அரசே வழிவகுக்கக் கூடாது. எனவே தமிழ்நாட்டில் மதுக்கடைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

Related Stories: