திருப்பூர் விஷ்வேஸ்வரர் சுவாமி கோயிலின் 213 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்ய கூடாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருப்பூர் தாலுக்கா, நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்வேஸ்வரர் சுவாமி திருக்கோயிலுக்கு பாத்தியப்பட்ட 213 ஏக்கர் நிலங்களை பத்திர பதிவு செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் தாலுகா நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள விஷ்வேஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 218.4 ஏக்கர் நிலங்களை ஆவணப் பதிவு எதுவும் செய்யக்கூடாது என்று அக்கோயிலின் செயல் அலுவலர் திருப்பூர் சார் பதிவாளருக்கு கடிதம் அளித்திருந்தார்.

இந்த கடிதத்தை எதிர்த்து ஏ.ஆர்.சண்முகசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி, செயல் அலுவலர் கொடுத்த கடிதத்தை தள்ளுபடி செய்து சண்முக சுந்தரத்தின் நிலத்தினை பதிவு செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கோயில் சார்பில் வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் சார்பில் செயல் அலுவலர் மாவட்ட பதிவாளருக்கு கொடுத்த கடிதம் சரிதான். எனவே, கோயிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நிலத்தை பத்திர பதிவு செய்ய கூடாது. மீதம் உள்ள 5 ஏக்கர் கோயில் நிலத்தை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: