சென்னை: கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 2022-23ம் ஆண்டில் மூடப்பட்ட 284 டாஸ்மாக் கடைகள் மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கியதன் மூலம் அரசுக்கு ரூ.32 கோடியே 81 லட்சத்து 11,834 இழப்பை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2021ம் அண்டில் 857 பார்களுக்காக பொதுமக்களிடமிருந்து டெண்டர் கோரப்பட்டது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் ஒரு குறிப்பிட்ட பங்கேற்பாளரை அனுமதித்து அவருக்கு சாதகமாக நடந்து கொண்டனர். டெண்டர்தாரர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி, ஒரே வங்கியிலிருந்து தொடர்ச்சியான வரிசை எண்களுடன் கூடிய இஎம்டி டிமாண்ட் டிராப்டைச் சமர்ப்பித்திருந்தனர். இந்த மாவட்டங்களில் உள்ள 857 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், 284 கடைகள் மூடப்பட்டன.
ஆனால் கள நிலவரத்தில், இந்த 284 கடைகளும் உரிமத்தைப் புதுப்பிக்காமலேயே இயங்கி வந்தன. விதிகளைப் பின்பற்றாததால், 2022-2023ம் ஆண்டில் கோவை வடக்கு மாவட்டத்தில் ரூ.17,27,13,360, கோவை தெற்கு மாவட்டத்தில் ரூ.13,58,23,630 மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ரூ.1,95,74,844 என அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. டாஸ்மாக் நிறுவனத்தின் சென்னை மூத்த மண்டல மேலாளர் (எஸ்.ஆர்.எம்) மற்றும் பிற அதிகாரிகள், நடைமுறையின்படி டெண்டரை நடத்தவில்லை.
கோவை, கரூர் மற்றும் பிற மாவட்டங்களைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகள், மதுபானக் கடை உரிமையாளர்களிடம் இருந்து கட்சி நிதியை வற்புறுத்தி வசூலித்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பழைய மற்றும் பயன்படுத்தப்பட்ட பாட்டில் விநியோகஸ்தர்கள், போலியான விலைப்பட்டியல்களை வழங்குவதன் மூலமோ அல்லது விலைப்பட்டியல் தொகையைப் அதிகரித்து பணத்தை ஈட்டி, மதுபான ஆலை நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெற்று, தங்கள் தரகுத்தொகையைக் கழித்த பிறகு, மீதமுள்ள பணத்தை அந்தந்த ஆலைகளுக்கே திருப்பி அளிக்கின்றனர்.
பதிலுக்கு, இந்த மதுபான ஆலைகள், விநியோக ஆணைகளைப் பெறுவதற்காக, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அந்தப் பணத்தைப் பயன்படுத்துகின்றன. டாஸ்மாக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ். விசாகன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் விற்பனைக் கடைகளின் கோரிக்கை எதுவும் இல்லாதபோதும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில மதுபான ஆலை நிறுவனங்களுக்கு மதுபானங்களை வழங்கி சாதகமாகச் செயல்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகள் உண்மையான எம்.ஆர்.பி விலையை விட அதிக தொகையை வசூலித்துள்ளன. அதாவது, வெளிநாட்டு மதுபானங்களுக்கு ரூ.500 வரையிலும், மதுபானத்தின் பிராண்டைப் பொறுத்து ரூ.10 முதல் ரூ.100 வரையிலும் 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை வாடிக்கையாளர்களிடமிருந்து திட்டமிட்ட முறையில் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அப்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளரான பாஸ்கர் மற்றும் தனியார் நபரான ரதேஷ் ராஜ் சண்முகவேல் ஆகியோர், முறையற்ற ஆதாயம் பெறுவதற்காக டாஸ்மாக் அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் செல்வாக்கு செலுத்தியுள்ளனர்.
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் புலன் விசாரணைக்குரிய குற்றம் இழைக்கப்பட்டதற்கான முகாந்திரமான ஆதாரங்கள் உள்ளன. அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் மனுக்கள் மற்றும் எதிர் பிரமாணப் பத்திரத்திலிருந்து, அரசு ஊழியர்களான செந்தில் பாலாஜி, முன்னாள் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சர், எஸ். விசாகன், முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர், டி. ராமதுரை முருகன், ஆர்.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சரின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர் ஆகியோர் தங்களது அதிகாரப் பதவியை துஷ்பிரயோகம் செய்து குற்றச் சதியில் ஈடுபட்டது தெரிய வருகிறது.
2021 முதல் மதுபான ஆலை நிறுவனங்களுடன், பாட்டில் நிறுவனங்கள், அதன் உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்களான ரதேஷ் ராஜ் சண்முகவேல், செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி, முலனூர் கார்த்திக் தவறான ஆவணங்களைத் தயாரித்தல், மோசடி மற்றும் முறைகேடு செய்தல் ஆகியவற்றின் மூலம், டாஸ்மாக்கின் அரசியல் நிர்வாகிகள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகளின் ஆதரவுடன் செயல்பட்ட அங்கீகரிக்கப்படாத அதிகாரத் தரகர்களிடையே உருவான கூட்டணியால், பெரும் பணத்தை திட்டமிட்ட முறையில் அரசின் கருவூலத்திற்கு கடுமையான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
