விரைவில் தருமபுரியில் செவிலியர் கல்லூரி: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

சென்னை: தருமபுரி தொகுதி பாமக எம்எல்ஏ சவுமியா அன்புமணி கடந்த 27ம் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜுக்கு எழுதிய கடிதத்தில், “தருமபுரி மாவட்டத்தில் தற்போது 108 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் இருந்து ஆண்டுதோறும் 19 ஆயிரம் மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு தகுதி பெறுகின்றனர்.

பெரும்பாலானோர் பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தாலும் குறிப்பிட்ட அளவிலான மாணவ, மாணவிகள் செவிலியர் பயிற்சி கல்லூரியில் சேர ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால், தருமபுரி மாவட்டத்தில் அரசு செவிலியர் கல்லூரி எதுவும் இல்லை. தீவிர ஆர்வம் கொண்டவர்கள் தங்களின் வசதிக்கேற்ப தருமபுரி பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்தும், தருமபுரி அரசு செவிலியர் கல்லூரி தொடங்கப்படாதது மிகவும் வேதனைக்குரிய விஷயம் ஆகும். ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில், இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு சார்பில் செவிலியர் மற்றும் துணை மருத்துவ படிப்புகளுக்கான கல்லூரி தொடங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, மறுநாள் 28ம் தேதி சவுமியா அன்புமணிக்கு அமைச்சர் அருண்ராஜ் எழுதியுள்ள கடிதத்தில், “தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் சேர்க்கை திறனுடன் கூடிய மாதிரி பிஎஸ்சி செவிலியர் கல்லூரி விரைவில் தொடங்கவுள்ளது,” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: