டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: மதுபான உற்பத்தி ஆலைகளிலும் நடந்தது: ஓட்டலில் வைத்து செந்தில்பாலாஜியிடம் விசாரணை

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக சென்னை, கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை ஓட்டலில் தங்கியிருந்த செந்தில்பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 5,380 பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது.

இந்தக் கடைகள் மூலம் தினமும் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை வருமானம் வருவதாக கூறப்படுகிறது. பண்டிகை நாட்களில் ரூ.200 கோடி முதல் ரூ.400 கோடி வரை வருமானம் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த கடைகளில் ஒவ்வொரு மாதமும் ரூ.102 கோடி அளவுக்கு முறைசாரா வழிகள் மூலம் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை மூலம் டாஸ்மாக் வருவாய் பல்வேறு பெயர்களில் திசை திருப்பட்டு வந்ததாக கற்பனையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. அரசியலுக்காகவும் இந்தக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

மேலும் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கப்படுவதாகவும், இந்தப் பணம் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜிக்கு செல்வதாக தற்போது முதல்வராக இருக்கும் விஜய் குற்றம்சாட்டினார். ஆனால் விஜய் முதல்வராக பதவி ஏற்ற பிறகு, டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வீடியோவும் வெளியிடப்பட்டன. இதனால் அப்போது பாட்டிலுக்கு ரூ.10 வசூலித்தபோது, அமைச்சருக்கு செல்வதாக கூறியவர்கள், தற்போது வசூலிக்கப்படும் ரூ.20 யாருக்குச் செல்கிறது என்ற கேள்விகளை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகளை கேட்கத் தொடங்கினர்.

ஆனால் இந்த கேள்விகளுக்கு முதல்வர் விஜயிடமோ, அமைச்சர்களிடமோ தெளிவான பதில் அளிக்கப்படவில்லை. அதேபோலத்தான், கடந்த 5 ஆண்டுகளில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு ரூ.3,600 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக வதந்திகள் எழுப்பப்பட்டு வந்தன. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பணிகளை ஒப்பந்த எடுத்த நிறுவன உரிமையாளர்கள் 4 பேர் மற்றும் மதுபான ஆலை நிறுவனங்கள் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

அதைதொடர்ந்து, டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள், மொத்த விற்பனையாளர்களின் அலுவலகங்கள், வீடுகள், டாஸ்மாக் மதுபானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என சென்னை, புதுக்கோட்டை, திருவாரூர், கரூர், தஞ்சாவூர், கோயம்புத்தூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை என 14 மாவட்டங்களில், 45 இடங்களில் நேற்று அதிகாலை முதல் நள்ளிரவு வரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதன்படி கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, மூர்த்திபாளையத்தில் உள்ள அரவது உதவியாளர் சுப்பிரமணியன் வீடு, கோயம்பள்ளியில் உள்ள பாஸ்கரன் வீடு, கார்த்திக், ரமேஷ் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். அதேபோல் கரூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம், ஈரோடு, கோவை, பொள்ளாட்சி, நரசிம்மநாயக்கன் பாளையம் மற்றும் சென்னை தி.நகர் தனிகாசலம் சாலையில் உள்ள டாஸ்மாக் நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள், தொழிற்சாலைகளில் சோதனை நடந்தது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எந்த தகவலும் வெளியிடவில்லை. மேலும் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். 41 இடங்களில் நடந்த சோதனையில் வழக்கு தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

* குறிவைக்கப்படும் செந்தில்பாலாஜி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் தற்போதைய தவெக அரசுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் நடந்து வருகிறது. கரூரில் நடந்த விபத்தில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கும் செந்தில்பாலாஜிதான் காரணம் என குற்றம்சாட்டினர். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் மறுத்ததோடு, தகவல் கிடைத்த பிறகுதான் மருத்துவமனைக்கு சென்று என்னுடைய சொந்த தொகுதி மக்களுக்கு உதவி செய்தேன்.

இனிமேலும் செய்வேன். அது என் கடமை என்று தெரிவித்தார். இதனால், அவர் மீது குற்றம்சாட்ட முடியாமல் தவெக அரசு தவித்து வருகிறது. இப்போது இந்த வழக்கில் தவெக பிரமுகர்கள் பலர் கைதாகலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், திருவல்லிக்கேணி போலீசார் மூலம் எம்எல்ஏக்களை இழுக்க முயன்றதாக செந்தில்பாலாஜியை கைது செய்ய முயன்றனர்.

ஆனால் அந்த வழக்கில் முன் ஜாமீன் பெற்றவர், போலீஸ் நிலையம் சென்று கையெழுத்திட்டு வருகிறார். அவரை ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க முயன்று வரும் தவெக அரசு, தற்போது மீண்டும் டாஸ்மாக் முறைகேடு என்று லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் வழக்குப்பதிவு செய்துள்ளதாக திமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: