மண்டியா: தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறக்க காவேரி நீர் ஒழுங்குமுறை குழு (CWRC) பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகவும், கிருஷ்ண ராஜ சாகர் (KRS) அணையிலிருந்து தமிழகத்திற்குக் காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்தும் மண்டியா பகுதியில் விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகாவில் உள்ள அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலை காணப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறி உள்ளனர். இந்த சூழலில் உள்ளூர் விவசாயிகளின் பாசனத் தேவைகள் மற்றும் குடிநீர் தேவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கர்நாடக விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
KRS அணையை முற்றுகையிடுவது, சாலை மறியல் மற்றும் அரை நிர்வாணப் போராட்டங்களிலும் கர்நாடக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இங்கேயே குடிநீர் தட்டுப்பாடு குறித்த கவலைகள் நிலவுவதைச் சுட்டிக்காட்டிய போராட்டக்காரர்கள், கர்நாடகாவால் “ஒரு சொட்டு” நீரைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று முழக்கங்களை எழுப்பினர். மைசூருவிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தண்ணீர் பற்றாக்குறையை உணர்த்தும் வகையில் தலையில் காலிப் பானைகளைச் சுமந்து சென்ற போராட்டக்காரர்கள், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் (CWRC) உத்தரவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு மைசூருவில் பேரணியாக சென்றனர்.
கர்நாடகாவில் மழைக்காலம் தொடங்கி ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன; ஆனாலும் KRS அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வந்து சேரவில்லை. இங்குள்ள மக்கள் குடிநீருக்கே திண்டாடும் நிலை உள்ளது. கால்நடைகளுக்கோ அல்லது விவசாயத்திற்கோ தண்ணீர் இல்லை. இந்த சூழலில் 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கன அடி நீரைத் திறந்துவிடுமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிடுவது என்பது எந்த வகையில் நியாயம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
