*விவசாயிகள் அதிர்ச்சி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்து தென்னைகளை நாசப்படுத்தி யானை அட்டகாசம் செய்த சம்பவம் விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி அடுத்த ஆழியார் மற்றும் நவமலை பகுதியில் இருந்து, அவ்வப்போது யானைகள் உணவுக்காக இடம்பெயர்கிறது.
அதிலும் ஆழியார் அணையை தொட்டு உள்ள பகுதியில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. அங்குள்ள தோட்டங்களில் புகுந்து செல்லும் யானைகள் பயிர்களை நாசப்படுத்துவது விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆழியார் அருகே புளியங்கண்டி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் காட்டு யானை புகுந்தது. அந்த யானை, அங்கு நடப்பட்டிருந்த தென்னங்கன்றுகளில் இருந்த குருத்துகளை ருசித்ததுடன், சில தென்னங்கன்றுகளை வேருடன் பிடுங்கி எறிந்தது. நள்ளிரவு முதல் அதிகாலை வரை அந்த யானை உலா வந்தது. பின்னர், நேற்று அதிகாலையில் அந்த யானை அங்கிருந்து இடம் பெயர்ந்து வனப்பகுதிக்கு சென்றது.
இந்நிலையில், புளியங்கண்டியில் உள்ள தோட்டத்தில் தென்னங்கன்றுகள் சேதமாகி கிடப்பதை அறிந்து விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இருப்பினும், அவ்வப்போது யானைகள் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து தென்னை உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்துவதால் உரிய இழப்பீடு வழங்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
