வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மீது காரசார விவாதம்; பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்: ராகுல், பிரியங்கா காந்தி குற்றச்சாட்டால் பரபரப்பு

 

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று காரசாரமாக நடந்தது. இதில் பேசிய காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, ‘‘பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பவர் புதிய ஒன்றிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என பிரகலாத் ஜோஷியை விமர்சித்தது கடும் சர்ச்சையாகி உள்ளது. இதே குற்றச்சாட்டை ராகுல் காந்தியும் சுமத்தி உள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக கடந்த 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடங்கி வந்த நிலையில், வினாத்தாள் கசிவு முறைகேட்டை தடுக்க பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதாவை ஒன்றிய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, மக்களவையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதம் தொடங்கியது. விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒன்றிய அரசை கடுமையாக சாடின. குறிப்பாக, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, புதிய ஒன்றிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரகலாத் ஜோஷியையும் கடுமையாக விமர்சித்ததால் அவையில் அனல் பறந்தது.

விவாதத்தில் பிரியங்கா காந்தி 29 நிமிடங்களில் பேசியதாவது:நியாயமான விஷயத்திற்காக அகிம்சை வழியில் போராடிய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதும், அவர்கள் மீது தடியடி நடத்தியதும் ஏன் அவசியமானது? இளம்பெண்களின் ஆடைகளை கிழித்து அவர்களை அவமானப்படுத்தியது, இரக்கமின்றி அவர்களை தாக்கியது ஏன்? நாட்டின் இளைஞர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் மற்றும் ஏகே-47 துப்பாக்கிளால் சுடுவது ஏன்? அவர்கள் என்ன தீவிரவாதிகளா?

இன்று இந்த கேள்விகளை காங்கிரஸ் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசமும் எழுப்புகிறது. அவற்றுக்கு பதிலளிக்கும் பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. இந்த அரசாங்கம் ஏன் நாட்டின் இளைஞர்களை கண்டு அஞ்சுகிறது? அவர்களின் குரலை ஒடுக்குவதற்கான உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது? வினாத்தாள் கசிவு விவகாரங்களை கையாள விரைவு நீதிமன்றங்கள் அமைப்பதால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே அமைக்கப்பட்ட விரைவு நீதிமன்றங்களின் செயல்பாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

மோடி அரசு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைக் குறை கூறுவதும், வெற்று அரசியல் விளையாட்டுகளை ஆடுவதும் பலனளிக்காது. பிரதமர் மோடி அவர்கள், ஜென்-ஸி தலைமுறையினரின் மனதை வெல்ல விரும்பினால், வெவ்வேறு கேமரா கோணங்களில் வீடியோக்களை எடுப்பது உதவாது. அவர் தனது கேமரா கோணத்தை அல்ல, தனது இதயத்தின் கோணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

இந்த புதிய தலைமுறை விழிப்புணர்வு மிக்கது. பொய்களை அடையாளம் காணும் அபாரமான திறன் கொண்டது. அவர்களின் மனதை வெல்ல, பிரதமர் மோடி உண்மையின் பாதையில் பயணிக்க வேண்டும். மோடியின் ஆட்சியில் இளைஞர்களுக்கு கடுமையான அநீதியும், காட்டுமிராண்டித்தனமும் இழைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, பொறுப்பேற்று, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் மீது விழும் ஒவ்வொரு தடியடியும், அவர்களை விட அரசின் கவுரவத்தையே அதிகம் பாதிக்கிறது. நாட்டின் இளைஞர்கள் கேட்பது நீதியைத்தான், பிச்சையை அல்ல. அவர்கள் அரசை வீழ்த்த வரவில்லை, மாறாகத் தங்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கவே வந்திருக்கிறார்கள். இந்த நாட்டின் குழந்தைகள் மீது பெல்லட் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்த உத்தரவிட்டது யார் என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மோடியும் பதிலளிக்க வேண்டும். இந்தக் கேள்வியை ஒட்டுமொத்த நாடும் எழுப்புகிறது.

நாட்டின் கல்வி முறையில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. ஆர்எஸ்எஸ் சார்ந்த நபர்களை சேர்த்ததால் அவர்கள் கல்வி முறையை சீரழித்து விட்டனர். இதனால் பல குழந்தைகள் கடும் அழுத்தத்திற்கு ஆளாகித் தற்கொலை செய்துகொள்கிறார்கள், மற்றவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். வேலைவாய்ப்பின்மை தலைவிரித்தாடுகிறது. வேலைவாய்ப்பை உருவாக்கும் துறைகளை அரசு பலவீனப்படுத்தியுள்ளது. இன்று நாட்டின் தேர்வு முறை முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. 7.5 கோடி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மாபியா கும்பல் கூட தண்டிக்கப்படவில்லை.நாட்டின் கல்விக்கான பட்ஜெட் ரூ. 1.40 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், நீட் தேர்வுக்காக மட்டும் 22 லட்சம் மாணவர்களின் குடும்பங்களிடமிருந்து ஆண்டுதோறும் ரூ. 1.32 லட்சம் கோடி வசூலிக்கப்படுகிறது.

இந்த ஒட்டுமொத்த அமைப்பின் மீதான நாட்டின் இளைஞர்களின் நம்பிக்கை தகர்க்கப்பட்டுவிட்டது. இந்த நம்பிக்கையை மீட்டெடுக்க, அமைப்பிற்குள்ளேயே அதற்கான தீர்வுகளைக் காண முடியாது. அமைப்பின் எல்லைகளைத் தாண்டி வெளியே வர வேண்டும். உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மோடி அரசால் இதை உணர முடியவில்லை. விளம்பரம் மற்றும் தங்களுக்குச் சாதகமான ஊடகங்களின் உதவியுடன் தங்கள் படகு கடலைக் கடந்துவிடும் என்று இந்த அரசு இன்னும் நம்புகிறது.

கர்ப்பிணிப் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தவர் புதிய கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் நாட்டின் கோடிக்கணக்கான சிறுமிகளுக்குப் பிரதமர் என்ன செய்தியைச் சொல்லியிருக்கிறார்? அந்தச் செய்தி மிகத் தெளிவாகவும் உரத்த குரலிலும் வெளிப்படுகிறது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. (இந்த குற்றச்சாட்டால் அவையில் சிறிது நேரம் அமளியும் சலசலப்பும் ஏற்பட்டது)

உங்கள் ஆட்சியில் மிகப்பெரிய அளவிலான திருட்டுகளை நாங்கள் பார்த்துள்ளோம். தேர்தலின் போது வாக்குகள் திருடப்படுவது, ராமர் கோயில் நன்கொடைகள் திருடப்படுவது, உங்கள் தொழிலதிபர் நண்பர்களால் தேசிய சொத்துகள் அபகரிக்கப்படுவது மற்றும் விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுவது எனப் பலவற்றைச் சொல்லலாம். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக மிகப்பெரிய திருட்டு எதுவென்றால், நாட்டின் இளைஞர்களின் கனவுகள் திருடப்பட்டதே.

நாட்டின் இளைஞர்கள் மனச்சோர்வடைந்து அவர்களின் நம்பிக்கைகள் சிதைந்துபோனால், அது இந்தியாவுக்குத் தோல்வியாக அமையும். காங்கிரஸ் கட்சியினராகிய நாங்கள் எங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம்; ஆனால், இந்தியா தோல்வியைச் சந்திக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். புதிய கல்வி முறையை அமல்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ‘‘கல்வி முறை குறித்து இளைஞர்களும், பல இளம் பெண்களும் போராடிய நிலையில், அவர்கள் தாக்கப்பட்டும் அடித்துத் துன்புறுத்தப்பட்டும் இறுதியில் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஒருவரை இந்தியாவின் கல்வி அமைச்சராக பாஜ நியமித்துள்ளது. அவர் மிகவும் அருவருப்பான நபர். பிரதமர் மோடி அமைச்சரவையில் பலர் உள்ளனர். அவர்களில் யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது’’ என்றார்.

குஜராத் கலவரத்தின் போது நடந்த பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை ஆதரித்துப் பேசியவர் பிரகலாத் ஜோஷி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா முதலில் 6 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்ட நிலையில், அதை 10 மணி நேரமாக நீட்டிக்க அரசு ஒப்புதல் அளித்தது. இதனால் தொடர்ந்து விவாதம் நடந்தது.

* இதுவும் நீர்த்துப் போகும்

விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், ‘‘இது வெறும் திருத்த மசோதா மட்டுமே. 2 ஆண்டுகளுக்கு முன்பே 2024ல் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்திற்குப் பிறகு இந்த மசோதா கொண்டுவரப்பட்டது. அப்போதும், வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று அரசு கூறியது. ஆனால், 2026ல் நடந்த கசிவு சம்பவம் அந்தச் சட்டம் தோல்வியடைந்துவிட்டதை நிரூபித்தது. இனிவரும் காலத்திலும் இந்த மசோதாவும் தோல்வியடையும்’’ என்றார்.

பிரதமரை காப்பாற்ற பிரதான் பதவி நீக்கம்

சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் கூர்முனைகள் கொண்ட தடிகளையும், மின்சார தடிகளையும் கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இத்தகைய அநீதி அவசரகால கட்டத்தை போன்றது. இத்தகைய போராட்டம் மூலம் இந்த அரசாங்கத்தையே ஜனநாயகமாக்கிய மாணவர்களை நான் பாராட்டுகிறேன். மாணவர்கள் போராட்டத்தால் அதிர்ந்து போன அரசு வேறு வழியில்லாமல் கட்டாயத்தினால் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று பணிந்துள்ளது. இந்த விஷயத்தில் பிரதமரை காப்பாற்ற பிரதானை நீக்கிவிட்டீர்கள்’’ என்றார்.

* எதிர்க்கட்சிகள் பாகுபாடு

பாஜ எம்பி பன்சூரி ஸ்வராஜ் பேசுகையில், ‘‘வினாத்தாள் கசிவு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுத்த கோபத்தை வெளிப்படுத்துகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன. தேர்வு முறையை வலுப்படுத்த மோடி அரசு கட்டமைப்பு ரீதியான சீர்த்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது’’ என்றார்.

* மாநிலங்களவை ஒத்திவைப்பு

மாநிலங்களவை நேற்றும் நாள் முழுவதும் முடங்கியது. காலை 11 மணிக்கு அவை கூடிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த அமளியால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் கடும் அமளிக்கு மத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதாவை ஒன்றிய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி தாக்கல் செய்தார். அடுத்ததாக தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு மசோதா மீதான விவாதம் தொடங்க இருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி ஓயாததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமித்ஷாவின் மவுனமும், அவர் அவைக்கு வராததுமே முடக்கத்திற்கு காரணம் என காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

* பிரதானுக்கு பிரமாத வரவேற்பு உங்களுக்கு வெட்கமில்லையா?

மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து பதவி விலகிய முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன்தினம் எம்பியாக நாடாளுமன்றத்திற்கு வந்த போது சக பாஜ எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்றைய விவாதத்தில் கடுமையாக விமர்சித்தனர். விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் கவுரவ் கோகாய், ‘‘பதவி விலகிய பின் அவைக்கு வந்த தர்மேந்திர பிரதானை ஏதோ பாகிஸ்தானுடன் போரிட்டு வென்றவரை போல பாஜவினர் வரவேற்றனர்.

உங்களுக்கு வெட்கமே இல்லையா?’’ என்றார். தர்மேந்திர பிரதான் ஏதோ சூப்பர் ஸ்டார் போல வரவேற்கப்பட்டதாக பிரியங்கா காந்தி கூறினார். ‘‘தர்மேந்திர பிரதானுக்கு சூப்பர் ஸ்டார் வரவேற்பு அளிக்கப்பட்ட சமயத்தில், மகாராஷ்டிராவில் ஒரு குடும்பம், வினாத்தாள் கசிவு விவகாரத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் மகளின் தற்கொலைக்காகத் துயரப்பட்டுக் கொண்டிருந்தது. அரசு எதற்காகத்தான் இவ்வளவு பெருமை கொள்கிறது?’’ என்றார்.

Related Stories: