காதலிக்க மறுத்த சிறுமிக்கு கத்திக்குத்து: போலீசுக்கு பயந்து எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு சாவு

 

புவனகிரி, ஜூலை 28: சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ஐயப்பன்(28), எலக்ட்ரிசியன். இவர் அருகில் உள்ள கிராமத்தில் ஒரு வீட்டுக்கு எலெக்ட்ரிசியன் வேலை செய்வதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த 16 வயது சிறுமிக்கும், ஐயப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இது காதலாக மாறியது. இருவரும் காதலித்து வந்துள்ளனர். சிறுமி சி.முட்லூர் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி ஐயப்பனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஐயப்பன் அந்த சிறுமியிடம் சென்று கேட்டபோது, சிறுமி காதலிக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருப்பதை அறிந்த ஐயப்பன் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரிடம் மீண்டும் தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஐயப்பன் கையில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் சிறுமியின் கை, கழுத்து, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில், சிதம்பரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் அப்புதுறை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஐயப்பனை தேடி வந்தனர்.

இதற்கிடையில் போலீசார் தேடுவதை அறிந்த ஐயப்பன் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி அருகே தங்கும் விடுதி பின்பகுதியில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தூக்குபோட்டு இறந்த ஐயப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அண்ணாமலை நகர் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: