இன்றைக்குள் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் வேண்டும் வழக்குகளை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும்: ஒன்றிய அரசுக்கு கரப்பான் பூச்சி கட்சி எச்சரிக்கை

 

புதுடெல்லி: போராட்டக்காரர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதியின்படி, எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் இன்றைக்குள் தராவிட்டால் மீண்டும் போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் டெல்லியில் 36 நாள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து அவர்களின் வாக்குறுதிகளை ஒன்றிய அரசு ஏற்றது. அதன்படி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது நாடு முழுவதும் போடப்பட்ட எப்ஐஆர்களை திரும்பப் பெற வேண்டும், நீட் மறுதேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கரப்பான் பூச்சி கட்சியினரின் மற்ற கோரிக்கைகளையும் ஏற்பதாக ஒன்றிய அரசு உறுதி அளித்தது. அதன்பேரில் மாணவர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், கரப்பான் பூச்சி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா அளித்த பேட்டியில் கூறியதாவது: போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக ஒன்றிய அரசுடன் நடந்த 3ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து எப்.ஐ.ஆர்களும் திரும்பப் பெறப்படும் என்றும், எதிர்காலத்தில் எந்தவொரு ஒருங்கிணைப்பாளர் அல்லது போராட்டக்காரர் மீதும் புதிய எப்ஐஆர் பதிவு செய்யப்படாது என்றும் நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதொடர்பாக ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோரிடம் நாங்கள் வரைவு ஒப்பந்தத்தைச் சமர்ப்பித்தோம். சட்டரீதியான ஆலோசனைகளுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமைக்குள் (இன்று) அரசு எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தைப் பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டது.

அரசு எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தைப் பகிர்ந்துகொள்ளும் வரை நாங்கள் காத்திருக்கிறோம். மூத்த அமைச்சர் அந்த ஒப்பந்தத்தை மதித்துச் செயல்படுவார் என்றும், எப்ஐஆர்கள் திரும்பப் பெறப்படும் என்றும், போராட்டக்காரர்கள் அல்லது ஒருங்கிணைப்பாளர்கள் யாரும் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும், எதிர்காலத்தில் வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்றும் நாங்கள் நம்புகிறோம்.

அதே சமயம் செவ்வாய்கிழமைக்குள் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் கிடைக்கப் பெறாவிட்டால், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படாவிட்டால், எங்கள் அமைப்பு மீண்டும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார். கரப்பான் பூச்சி கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் கூறுகையில், ‘‘முக்கிய கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்ட பிறகு அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு, எங்களின் போராட்டத்தை நல்லெண்ணத்தின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வந்தோம்’’ என்றார்.

* வழக்குகள் வாபஸ் பெறப்படவில்லை

அசாம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் எப்ஐஆர்கள் வாபஸ் பெறப்படவில்லை என்றும் கரப்பான் பூச்சி கட்சி (சிஜேபி) நேற்று கவலை தெரிவித்தது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் எக்ஸ் பதிவில், ‘‘பாஜ அல்லது என்டிஏ ஆளும் எந்தவொரு மாநிலத்திலும், இப்போதும், எதிர்காலத்திலும் எந்தவொரு போராட்டக்காரர் மீதும் தண்டனை நடவடிக்கை எடுக்கப்படாது என்று ஒன்றிய அரசு உறுதியளித்த பின்னரே நாடு தழுவிய போராட்டத்தை நாங்கள் வாபஸ் பெற்றோம். ஆனால், அசாம், மேற்கு வங்கம், பீகாரில் இருந்து வரும் தகவல்கள் மிகுந்த கவலை அளிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவி வழங்கி வருகிறோம்’’ என்றார்.

Related Stories: