புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி குறித்து விளக்கம் அளிக்கக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கியது. கடும் அமளிக்கு மத்தியில் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்திய நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், நாடாளுமன்றம் முடங்கியதால், கடந்த 20ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடரில் எந்த அலுவல்களும் நடக்கவில்லை.
இதையடுத்து மாணவர்கள் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு பணிந்த நிலையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை கடந்த 25ம் தேதி ராஜினாமா செய்தார். மாணவர்களின் மற்ற கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஜந்தர்மந்தர் போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும், வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில், பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.
அதே சமயம், கடந்த 20ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திய மாணவர்கள் மீது போலீசார் கொடூர தாக்குதல் நடத்தியது தொடர்பாக பிரதமர் மோடி, அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவசர விவாதம் நடத்த வேண்டுமெனவும் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்தன. இதுதொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் ரந்தீப் சுர்ஜேவாலா, சயீத் நசீர் ஹூசேன், ரேணுகா சவுத்ரி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சகாரிகா கோஷ் ஆகியோர் விதி 267ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை வழங்கியிருந்தனர்.
இந்நிலையில், வார விடுமுறைக்குப் பின், மக்களவை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியதும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் பிரதமர் அலுவலக துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபடும் தனிநபர்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்க சபாநாயகர் ஓம்பிர்லா அழைப்பு விடுத்தார்.
ஆனால், மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கொடூர தடியடி தாக்குதல் குறித்து அரசு முதலில் விளக்கமளிக்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடிய போது, அமளி நீடித்ததால், ஆளும், எதிர்க்கட்சிகள் இடையே சமரசம் ஏற்பட சபாநாயகர் ஓம்பிர்லா 3 மணி நேரம் அவகாசம் வழங்கினார்.
மாலை 5 மணிக்குள் முட்டுக்கட்டைக்கு தீர்வு காண வலியுறுத்தினார். இதன்படி, 3 மணி நேர இடைவெளிக்குப் பிறகு அவை மீண்டும் மாலை 5 மணிக்கு கூடியது.
அப்போதும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல மாநிலங்களவையிலும் காலையில் அவை தொடங்கியதில் இருந்தே எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவைக்கு வந்து விளக்கம் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அவை பிற்பகல் 2 மணி வரையிலும் பின்னர் 5.15 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகும் அமளி நீடித்ததால் இன்று காலை வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
* அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம்
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான போராட்டத்தின் போது மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையின் அத்துமீறல் மற்றும் வன்முறைக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பதாகைகள், பேனர் ஏந்தியவாறு பல எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் மகர் துவார் படிக்கட்டுகளுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் மஹுவா மொய்த்ரா, ஜேஎம்எம் எம்பி மஹுவா மஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, நீட் தேர்வுவை ரத்து செய்யக் கோரி திமுக எம்பிக்கள் தனியாக போராட்டம் நடத்தினர்.
* காங்கிரஸ் மீது அமைச்சர் புகார்
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் பேசுகையில், ‘‘பல கோடி மாணவர்களின் எதிர்காலத்துடன் சம்மந்தப்பட்ட வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா குறித்து எதிர்க்கட்சியினர் உட்பட பல உறுப்பினர்கள் விவாதத்தில் பங்கேற்கத் தயாராக இருந்தபோதிலும், காங்கிரசும் அதன் சில நட்பு கட்சிகளும் இடையூறு ஏற்படுத்துகின்றன. அவர்கள் விவாதத்தை நடத்த விடாமல் தடுக்கின்றனர்’’ என குற்றம்சாட்டினார்.
* இன்று விவாதம்
இரு அவைகளும் முடங்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டைக்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக நேற்று மாலை தகவல்கள் வெளியாகின. வினாத்தாள் கசிவு தடுப்பு சட்ட திருத்த மசோதா குறித்து விவாதிக்க அனைத்து கட்சி தலைவர்களையும் சபாநாயகர் ஓம்பிர்லா சம்மதிக்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இன்று இந்த மசோதா மீதான விவாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மசோதா மீதான விவாதம் 6 மணி நேரம் நடத்தப்படும் என்றும் சூழலை பொறுத்து கூடுதல் நேரமும் ஒதுக்கப்படும் என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
