மதம் மாறியவர்கள் மீதான எஸ்.சி அந்தஸ்து விவகாரம்; முந்தைய தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது: மறு ஆய்வு மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

 

புது டெல்லி: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவ போதகரான சிந்தாதா ஆனந்த் பால், என்பவர் சிலருக்கு எதிராக எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சிந்தாதா ஆனந்த் பால், கிறித்தவ மதத்திற்கு தழுவியதால் அவரால் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க முடியாது என்று குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரணை நடத்திய ஆந்திர உயர்நீதிமன்றம், ‘‘சிந்தாதா ஆனந்த் பால், ஒரு கிறிஸ்தவர், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பின்னர் பட்டியல் சாதி சமூகத்தின் உறுப்பினர் என்ற தகுதியை இழந்துவிட்டார்’’ என்று தீர்ப்பு வழங்கி இருந்தது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னதாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையே மீண்டும் உறுதி செய்து கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் முந்தைய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி கே மிஸ்ரா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘இந்த விவகாரத்தில் முன்னதாக ஆந்திர உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணையை நடத்திய பின்னர் தான் தெளிவான தீர்ப்பை வழங்கியது. எனவே கடந்த மார்ச் 24ம் தேதி பிறப்பித்த உத்தரவில் எந்தவித மாற்றமோ அல்லது திருத்தமோ செய்ய வேண்டிய அவசியமில்லை’’ என்று திட்டவட்டமாக தெரிவித்து மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: