தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம் பீகாரில் மாணவர் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பென்ட்

 

பாட்னா: பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  நீட் உள்ளிட்ட ஒன்றிய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்தன.

அந்த வகையில் பீகார் மாநிலத்திலும் கடந்த சனிக்கிழமை(25ம் தேதி) பீகார் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி சிவான் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் மீது காவலர் ஒருவர் ஏகே-47 ரக துப்பாக்கியால் சுட்டார். இதுதொடர்பான காணொலி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையையும், கண்டனங்களையும் குவித்து வருகிறது.

இதுகுறித்து பீகார் பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தன் எக்ஸ் பதிவில், “மாணவ போராட்டக்காரர்கள் மீது ஏகே-47 துப்பாக்கியால் சுடுவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை. ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அரசியலமைப்பில் உரிமை உள்ளது. இதேபோல் உரிமைகளுக்காக போராடும் விவசாயிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பெண்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது ஏகே 47 துப்பாக்கி சூடு நடத்தப்படுமா?” என காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “இந்த ஒட்டுமொத்த அமைப்புகளும் மாணவர்களுக்கு எதிரான அப்பட்டமான கொலைவெறியை கொண்டுள்ளது. மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். மாணவர்கள் மீதல்ல” என கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாணவரை ஏகே 47 துப்பாக்கியால் சுட்ட காவலர் அபிஷேக் படேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து சிவான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பூரன் குமார் ஜா கூறுகையில், “மாவட்ட உளவு பிரிவில் பணியாற்றும் காவலர் அபிஷேக் படேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன” என்றார்.

* ராகுலுக்கு பாஜ கண்டனம்

ராகுல் காந்தியின் கண்டனம் குறித்து பாஜ தேசிய செய்தி தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான சம்பித் பத்ரா கூறுகையில், “மாணவர் மீது ஏகே 47 துப்பாக்கி பயன்படுத்தியதாக பொய்யான தகவல்களை பரப்புவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வது அவமானம். பொய்யான குற்றச்சாட்டில் செயற்கையாக போராட்ட சூழலை உருவாக்க ராகுல் காந்தி முயல்கிறார். பொய்களையும், அவதூறுகளையும் பரப்பியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

Related Stories: