ஜம்மு: அமர்நாத் குகைகோயிலில் இதுவரை 4.15லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு பனிலிங்க தரிசனத்துக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 2ம் தேதி தொடங்கியது. வருகிற ஆகஸ்ட் 28ம் தேதியுடன் யாத்திரை நிறைவடைகின்றது. யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 4.15லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்க தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜம்முவின் பகவதி நகர் முகாமில் இருந்து 3823 பக்தர்கள் நேற்று யாத்திரை புறப்பட்டுச்சென்றனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 140 வாகனங்களில் பால்டால் வழித்தடத்தில் அவர்கள் புறப்பட்டுச்சென்றனர். பஹல்காம் வழித்தடத்தில் பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழித்தடத்தில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த வழித்தடத்தில் யாத்ரீகர்கள் யாரும் பயணிக்கவில்லை.
