பதவியை ராஜினாமா செய்த பிறகு நாடாளுமன்றம் வந்தார்; ஜிந்தாபாத் முழக்கத்துடன் தர்மேந்திர பிரதானுக்கு பாஜ வரவேற்பு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

 

புதுடெல்லி:மாணவர்கள் போராட்டங்களை தொடர்ந்து பதவி விலகிய தர்மேந்திர பிரதானை பாஜவினர் ஜிந்தாபாத் என முழக்கமிட்டனர். பதிலுக்கு வினாத்தாள் திருடர் என எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பி விமர்சித்தனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள் டெல்லி மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை கடந்த சனியன்று ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் நேற்று காலை நாடாளுமன்ற வளாகத்திற்கு வந்த பிரதானை சில பாஜ தலைவர்க்ள பாரம்பரியத் தொப்பி மற்றும் அங்கவஸ்தரம் அணிவித்து பிரதான் ஜிந்தாபாத் போன்ற முழக்கங்களுடன் வரவேற்றனர். அதே நேரத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் திருடர், திருடர், வினாத்தாள் திருடர் என முழக்கமிட்டதுடன் பிரதானுக்கு வரவேற்பு அளித்த ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை கடுமையாக விமர்சித்தனர்.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறுகையில், ‘‘பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களையே வரவேற்றவர்கள் இவர்கள். எனவே அவர்களைப் பற்றி நாம் பேசாமல் விடுவோம். கல்வி அமைச்சகத்தின் மூலம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கை திட்டங்களைச் செயல்படுத்தியதால் பிரதான் அவர்களுக்கு ஒரு ஹீரோவாக திகழ்கிறார். ஆனால் பிரதானைப்பொறுத்தவரை சமூக ஊடகங்களிலும், தெருக்களிலும் நாம் காண்பது போல அவரது உண்மையான முகம் இப்போது மக்களுக்குத் தெரியும்” என்றார்.

இதேபோல் மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் கூறுகையில், ‘‘ முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பாதுகாப்பதிலேயே அரசு தீவிரமாக இருக்கிறது. பாஜ அரசும், பிரதமர் மோடியும் இந்தியக் கல்வி முறையை சீர்திருத்த விரும்பவில்லை என்பது தெளிவாகிறது” என்றார்.

* பிரதான் பணி பாராட்டத்தக்கதா?

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,‘‘வினாத்தாள் கசிவுகள், சீர்குலைந்து வரும் கல்வி அமைப்பு, மாணவர்கள் மீதான தடியடி மற்றும் பெல்லட் குண்டு தாக்குதல் ஆகியவை நடந்தபோதிலும், பிரதானின் பணி பாராட்டத்தக்கதாக இருந்ததா எ ன்பதை பாஜ தெளிவுபடுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த மரியாதை எதற்காக? ஒரு வேளை ஆம் என்றால் நாட்டின் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பாஜ இந்த செய்தியைத்தான் சொல்ல விரும்புகிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

* ஷா, நட்டா, ரிஜிஜூ சந்திப்பு

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது சந்தித்தனர். நாடாளுமன்ற உணவகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அமைச்சர் அமித் ஷா, நட்டா ஆகியோருடன் வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் உடன் இருந்தனர்.

Related Stories: