ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை வி.ஆர்.வி அரசு உதவிபெறும் தொடக்க பள்ளியில் கடந்த 2012 ஆகஸ்ட் 27ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பள்ளியில் உண்மையில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை விட 187 மாணவர்கள் கூடுதலாக பயின்றதாக போலி ஆவணங்கள் உருவாக்கி 6 ஆசிரியர் பணியிடங்களை முறைகேடாக பெற்றதும், சத்துணவு திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு சலுகைகளை தவறான முறையில் பெற்றதும் கண்டறியப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.4 லட்சத்து 69ஆயிரத்து 853 அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதுதொடர்பாக பள்ளியின் தாளாளர் கருணாகரன் சஞ்சிவிதாஸ், தலைமை ஆசிரியை ஆலிஸ் தபிதா விஜயகுமாரி, வாலாஜா கிழக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பூங்கோதை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி தேன்மொழி, தாளாளர் கருணாகரன் சஞ்சிவிதாஸ், தலைமை ஆசிரியை ஆலிஸ் தபிதா விஜயகுமாரிக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். பூங்கோதையை விடுவித்தார்.
