நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் அரசு வக்கீல் பொறுப்பு வழங்க பெண் வக்கீலிடம் த.வெ.க. நிர்வாகி ரூ.15 லட்சம் லஞ்சம் கேட்டு பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் த.வெ.க ஆட்சி பொறுப்பேற்ற பின், அரசு வக்கீல்கள் பொறுப்புக்கு லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்து, நீதிமன்றம் வரை விவகாரம் சென்றது. இது தமிழ்நாடு முழுவதும் வக்கீல்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் தவெகவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரிடம், தவெக மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஷ் பேரம் பேசும் ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
பெண் வக்கீல்: ஹலோ.. யாரு…
அனீஷ்: வணக்கம்.. நான் மத்திய மாவட்டம் டி.வி.கே.வில் இருந்து பேசுறேன். நீங்க.. அரசு வக்கீல் பதவிக்கு விருப்பம் தெரிவித்து இருக்கிறீர்கள்.
பெண் வக்கீல் : எனக்கு யாரை மூவ் பண்ண வேண்டும் என்று தெரியல. உங்க கிட்ட தான் முதன் முதலில் பேசுறேன்.
அனீஷ்: ஓ.. ஹோ.. சரி நீங்கள் இரணியல் கோர்ட்டா?
பெண் வக்கீல்: ஆமா சார்… இரணியல், தக்கலை என இரண்டும் வரும்.
அனீஷ்: ஜி.பி.க்கு நீங்கள் தகுதி தானா..
பெண் வக்கீல்: ஆமா சார்.. ஏழு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு சார்…
அனீஷ்: டி.வி.கே. மெம்பருக்கு தான் பண்ணி கொடுப்போம். நீங்கள் டி.வி.கே. மெம்பருனு சொன்னாங்க. 15 இருந்தால் (ரூ.15 லட்சம்) பண்ணி கொடுக்கலாம். பணம் கொடுத்தா 10 நாளில் அப்பாயிமெண்ட் வந்துரும். பணம் ரெடியாகுமா?
பெண் வக்கீல்: அவ்வளவு பணம் இல்லை சார். ஒர்க் பண்ண வேண்டும் என்ற ஆசையில் தான் கேட்டேன். குறைக்க முடியுமா சார்?
அனீஷ்: ரூ. 12.50 லட்சம்னா ஓ.கே. உங்களுக்கு ஆர்டர் வந்துரும். கொடுத்த பணத்தை எடுத்து விடலாம். இப்போ பார்த்தீங்கனா, கடந்த ஆட்சியில் பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே நிலம் சம்பந்தமான பைல்கள் நிறைய பெண்டிங் இருக்கு. இந்த நிலங்களுக்கு பத்திரப்பதிவு தொடர்பாக, அரசு வக்கீலிடம் இருந்து கண்டிப்பாக கருத்துரு கேட்பார்கள். அதன் மூலம் சம்பாதிக்க முடியும். நீங்க யோசிக்காதீங்க. உடனடியாக பணம் தயார் செய்ய முடியுமா?
வக்கீல்: கம்மி பண்ணுங்க சார்..
அனீஷ் : இதுக்கு மேல கம்மி பண்ண முடியாது மேடம். வக்கீலுக்கு சம்பாதிக்க சொல்லி கொடுக்கணுமா. உண்மையில் ரூ.15 லட்சத்துக்கு ஒகே சொல்ல ஆள் இருக்கு. இருந்தாலும் உங்க கிட்ட பேசுறேன். நீங்கள் சொன்னா பண்ணி கொடுக்கோம்.
பெண் வக்கீல்: கம்மி பண்ணுங்க சார்..
அனீஷ்: 10 பர்சன்ட், 15 பர்சன்ட் வரைக்கும் மற்றவங்க கேட்கிறாங்க. நீங்க நேரடியாக யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். மற்றவங்களுக்கு 15 வாங்கிட்டு, உங்களுக்கு பன்னிரண்டரைன்னு சொல்றோம். ரொம்ப யோசிக்காதீங்க.
பெண் வக்கீல் : கட்சி பணி செய்ய எனக்கு ரொம்ப ஆசை சார்… அதுவும் அரசு வக்கீல் போன்ற பொறுப்பு இருந்தால் ஆர்வமாக பணியாற்ற வாய்ப்பாக இருக்கும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது எல்லாம் எனது ஆசை இல்ல சார்.. அமவுண்ட் ரொம்ப ஜாஸ்தி சார்..இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது.
இந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சி தலைமைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக கட்சி மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார்.
