போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ‘ஆசாதி’ முழக்கமிட்டால் புதிய ‘குண்டாஸ்’: மேற்குவங்க முதல்வரின் பேச்சால் சர்ச்சை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ‘ஆசாதி’ என முழக்கமிடுபவர்கள் மீது போலீசார் கடுமையான தாக்குதல் நடத்துவார்கள் என்றும் இது பாபர் ஆட்சியல்ல என்றும் பாஜக தலைவர்கள் எச்சரித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த பேரணியில் ‘ஆசாதி’ (சுதந்திரம்) என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, ‘ஆசாதி என முழக்கம் எழுப்புபவர்களை போலீசார் கடுமையாக தாக்குவார்கள். அவர்கள் வீட்டிற்கு நேரடியாகச் செல்ல முடியாது, கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குத்தான் செல்ல வேண்டி வரும். எங்கள் ஆட்சி பாபர் ஆட்சியல்ல; இது ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் ஆட்சி’ என்று எச்சரித்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து நந்திகிராமில் பேசிய அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி, ‘இந்தியா 1947ம் ஆண்டே சுதந்திரம் பெற்றுவிட்டது.

எனவே மீண்டும் ஆசாதி முழக்கம் எழுப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் ஈடுபட்ட தீவிரவாத அமைப்புகள் மீது புதிய குண்டாஸ் சட்டம் பாயும்’ என்றார். திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் வெளியிட்ட அறிக்கையில், ‘எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும் அமைதியான போராட்டங்களை ஒடுக்கவும் புதிய குண்டாஸ் சட்டத்தை மேற்குவங்க பாஜக அரசியல் ஆயுதமாகத் தவறாகப் பயன்படுத்தி வருகிறது’ என்று குற்றம் சாட்டினார்.

Related Stories: