திண்டுக்கல்: பழனி கோயிலின் ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஜஸ்டின் மணிகண்டனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனி கோயிலின் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ.2 கோடிக்கு முறைகேடாக வெள்ளத்துரை, சேதுபதி ஆகியோருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, நீதிமன்ற உத்தரவை மீறி போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இன்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் நில மோசடி தொடர்பாக, பழனி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் போலி டிரஸ்ட் பிரமுகர் உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, கடந்த 15.07.2026 அன்று இவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி டி.எஸ்.பி. அஜய் தங்கம் தலைமையில் முதற்கட்ட தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி தென்மண்டல எஸ்பி சஜிதா நேரடியாக வந்து இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், கோயில் செயல் அலுவலர் உள்ளிட்டோரிடமும் இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தொடர்புடைய கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வு பெற்ற வட்டாட்சியர் (தாசில்தார்) மாரியப்பன், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் (VAO) சின்னசாமி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 1880ஆம் ஆண்டு முதலாக உள்ள ஆவணங்கள் பெறப்பட்டு, அவற்றை முழுமையாகச் சிபிசிஐடி போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். மேலும், இந்தச் சர்ச்சைக்குரிய இடங்களுக்கு மின்சார இணைப்புகள் எவ்வாறு வழங்கப்பட்டன என்ற கோணத்தில், மின்சாரத்துறை அதிகாரிகளுக்குச் சம்மன் அனுப்பப்பட்டு அவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு நிலப் பத்திரப்பதிவு செய்ததாகத் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், “இந்த வழக்கிற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆவணங்களின் நகல்கள் ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்தன; அன்று ஒரு நாள் மட்டுமே நான் அங்குப் பொறுப்பு சார்பதிவாளராகப் பணியாற்றினேன்” என்று ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த மோசடிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று கூறி ஜஸ்டின் மணிகண்டன் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இவரைக் கைது செய்யத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், ஜஸ்டின் மணிகண்டன் இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்குச் சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று ஆஜராகி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. இந்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே, பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.
