வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்க இனிப்பு, காரம் தயாரிப்பு பணியில் களமிறங்கிய நன்னடத்தை கைதிகள்

*அதிகாரிகள் தகவல்

வேலூர் : வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்க இனிப்பு, காரம் தயாரிப்பு பணியில் நன்னடத்தை கைதிகள் ஈடுபட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகள் என்பது தண்டனைக்குரிய இடங்களாக இல்லாமல் சீர்திருத்தும் பள்ளிகளாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலையான பிறகு அவர்களது எதிர்காலத்திற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் பல்வேறு தொழில்கள் கற்றுக்கொடுத்து பொருட்கள் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மத்திய சிறையில், உள்ள நன்னடத்தை கைதிகள் போலீசாருக்கான ஷூக்கள் தயாரித்து வழங்கினர். பெட்ரோல் பங்க்கில் வேலை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், போலீசாருக்கு தயாரிக்கப்பட்ட ஷூக்கள் போல், பொதுமக்களுக்கான லெதர் ஷூக்களை கைதிகள் தயாரித்து விற்பனை செய்ய தொடங்கினார். லெதர் ஷூக்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான லெதர் செருப்புகளை தயாரித்து சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் அவர்களது உறவினர்கள் இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர். அவற்றில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா? என சிறை போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே எடுத்து செல்ல அனுமதித்து வருகின்றனர். மேலும் கைதிகள் உறவினர்கள் வாங்கி வரும் பொருட்களின் தரம் மற்றும் காலாவதியான பொருட்களால் கைதிகள் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில், கைதிகளுக்கு புதிய தொழில் பயிற்சியாக சிறைக்குள் நன்னடத்தை கைதிகளை கொண்டு இனிப்பு, காரம் தயாரிக்கப்பட்டு, கைதிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்த விலையில், கைதிகளுக்கு தரமான இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்குவதற்கான இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் பல்வேறு தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் கைதிகளை கொண்டு மிக்சர், வேர்கடலை, காராபூந்தி, ஓலை பக்கோடா, கார்ன் சிப்ஸ், பட்டர் முறுக்கு, வீல் சிப்ஸ், லட்டு, பாதுஷா, நெய் முறுக்கு, வத்த குழம்பு, மாங்காய் ஊறுகாய், ஆப்பிள் செவ்வாழை உள்ளிட்ட பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் இனிப்பு, காரம் உணவு வகை கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. பழங்கள் வெளியே மார்க்கெட்டில் வாங்கி அன்றைய தினத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
சிறை வளாகத்திற்குள் கைதிகள் தயாரிக்கும் உணவு பொருட்கள் என்பதால், உணவு பொருட்கள் கலப்படம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எடுத்து செல்வது தவிர்க்கப்படும்.

மேலும், கைதிகளுக்கு காலாவதியான பொருட்கள் வினியோகம் தடுக்கப்படுகிறது. மேலும் கைதிகளின் உறவினர்கள், அவர்களின் கணக்கிற்கு பணம் செலுத்தினால், அந்த தொகைக்கு ஏற்ப கைதிகளுக்கு உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கைதிகள் இனிப்பு, கார உணவு பொருட்களை தயாரிப்பதால், அவர்களுக்கு ஊதியம் கிடைப்பதுடன், தண்டனை முடிந்து வெளியே செல்லும் போது சுயதொழிலுடன் செல்வதால் அவர்களின் வாழ்வாதாரம் உயர்த்த உதவும். இனிப்பு, காரம், பழங்கள் விற்பனை மூலம் சிறையில் தினமும் ரூ.10 ஆயிரம் முதல் ₹18 ஆயிரம் வருவாய் கிடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறைக்குள் இயற்கை உரம் தயாரிப்பு

வேலூர் மத்திய சிறைக்குள் ஏராளமான மரங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி கைதிகள் பயன்படுத்தும் பொருட்கள் என்று தினமும் 500 கிலோ குப்பை சேர்கிறது. இதில் மக்கும் தன்மை கொண்ட குப்பைகளை சிறை வளாகத்திற்குள்ளே பள்ளம் தோண்டி அங்கேேய கொட்டி இயற்கை உரமாக மாற்றி, விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: