ஆபத்தை உணராமல் பவானி ஆற்றில் குளித்த மக்கள்

 

மேட்டுப்பாளையம், ஜூலை 27: கோவை, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பில்லூர் அணை உள்ளது. இதனை ஆதாரமாக கொண்டு 10க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுகிறது. பில்லூர் அணையில் நீர்மின் உற்பத்தியும் நடைபெறுவதால் அவ்வப்போது மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் பவானி ஆறு வற்றாத ஜீவ நதியாக எப்போதும் நீரோட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆடி மாத விடுமுறை தினம் என்பதால் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வாகனங்களில் வந்திருந்து அம்மனை தரிசனம் செய்து அருளாசி பெற்றுச்சென்றனர். மேலும்,கோயிலை சுற்றிலும் உள்ள மண்டபங்களில் காதணி விழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளும், கிடாய் வெட்டி விருந்துகளும் நடைபெற்றன. இதனால் நேற்று வனபத்ரகாளியம்மன் கோயில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனிடையே கோயில், சுப நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துக்கு வந்த மக்களில் சிலர் குழந்தைகளுடன் தடையை மீறி சமயபுரம் மின் கதவணை பகுதியில் குளித்து மகிழ்ந்தனர்.

பவானி ஆற்றில் எப்போதுமே நீரோட்டம் இருக்கும். அதே வேளையில் மின் உற்பத்திக்காக அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்படுவதால் ஆற்றில் நீரோட்டம் திடீரென அதிகரிக்கும். இதனை அறியாத வெளியூரை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் உள்ளூரை சேர்ந்த இளைஞர்கள் ஆபத்தான முறையில் தடையை மீறி இப்பகுதிகளில் உள்ள பவானி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். ஏற்கனவே, பவானி ஆற்று நீரில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகி உள்ள நிலையில் அதனை தடுக்க லைப் கார்ட்ஸ் குழுவினர் அமைக்கப்பட்டு அவர்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறுமுகை வரை உள்ள சுமார் 19 ஆபத்தான இடங்களை கண்டறிந்து அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இக்குழுவினர் பவானி ஆற்றின் தடை செய்யப்பட்ட பகுதிகளில் குளிக்கும் மற்றும் துணி துவைக்கும் மக்களை அவ்வப்போது எச்சரித்து அனுப்பி வைத்து வருகின்றனர்.

 

Related Stories: