கோவை, ஜூலை 28: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள நிர்வாக மற்றும் ஆசிரியர் தொடர்பான பிரச்னைகளில் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேராசிரியர்கள் பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த் தலைமையில், செயலாளர் உமாதேவி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பான மனுவை அளிக்க பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பதிவாளர் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி பதிவாளர் அலுவலகம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பல்கலையில் கோப்பு கண்காணிப்பு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பிரிவுகளில் இருக்கும் சிண்டிகேட் உறுப்பினர் பதவிகளை விரைந்து நிரப்ப வேண்டும். பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களுக்கு சிஏஎஸ் திட்டத்தின் கீழ் நேர்முகத் தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும். ஆசிரியர்களின் பணிப்பதிவு புதுப்பித்தல், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பதவியில் உள்ள துறைத்தலைவர்கள், இயக்குநர்கள் மற்றும் டீன்களுக்கு சுழற்சி முறை அமல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
