பாத்திரம் கழுவ சொன்னதால் ஆத்திரம்: வடமாநில தொழிலாளிக்கு கத்திக்குத்து

 

கோவை, ஜூலை 28: பாத்திரம் கழுவ சொன்னதால் ஆத்திரம் அடைந்து வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் தீபக் குமார் (25). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை வந்தார். இங்கு கவுண்டம்பாளையம் டிவிஎஸ் நகரில் அறை எடுத்து தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடன் பீகாரைச் சேர்ந்த தனது நண்பர் குணாலன் (28) உள்ளிட்ட சிலரும் தங்கியிருந்தனர். இந்த நிலையில், கடந்த 26ம் தேதி இரவு அனைவரும் ஒன்றாக சமைத்து சாப்பிட்டனர். சாப்பிட்டு முடித்ததும், குணாலனிடம் பாத்திரங்களை கழுவுமாறு தீபக் குமார் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணாலன், தீபக் குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துத் தகராறில் ஈடுபட்டார். பின், அவர்களை சமாதானம் செய்து அனைவரும் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கச் சென்றனர்.

அனைவரும் தூங்கியதும், ஆத்திரம் அடங்காத குணாலன் திடீரென கத்தியை எடுத்து வந்து, மாடியில் தூங்கிக் கொண்டிருந்த தீபக் குமாரின் வயிற்றில் சரமாரியாகக் குத்தினார். வலி தாங்க முடியாமல் தீபக் குமார் அலறித் துடித்தார். அவரின் சத்தம் கேட்டு மற்றவர்கள் எழுந்து ஓடி வந்தனர். அதற்குள் குணாலன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். படுகாயமடைந்த தீபக் குமாரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தீபக் குமார் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய பீகாரைச் சேர்ந்த குணாலனை தேடி வருகிறார்.

 

Related Stories: