திண்டிவனம், ஜூலை 27: தேர்தலில் கட்சி சார்பில் பொருளாதார உதவி செய்யாததால் அதிமுக தோல்வி அடைந்து விட்டது என்று முன்னாள் எம்எல்ஏ அர்ஜுனன் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், சி.வி.சண்முகம் ஆதரவாளரான அர்ஜுனன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: விழுப்புரம், வானூர், திண்டிவனம் தொகுதியில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகம் தான் காரணம் என்று தற்போதைய மாவட்ட செயலாளர் பசுபதி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலின்போது அதிமுகவில் இருந்த அவர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அவர் வசிக்கும் பகுதியில் அதிமுக வேட்பாளர் 54 வாக்குகள் பெற்றார். தேர்தலின்போது ஐ.போன் பேஸ் டைம்மில் பழனிசாமி பேசுவார் என்று அவரின் உதவியாளர் கூறியதன்பேரில், காத்திருந்தது தான் மிச்சம். கடைசிவரை அவர் பேசவில்லை.
அவர் ஒத்துழைப்பு அளித்து இருந்தால் நாங்கள் நிச்சயம் வெற்றிபெற்று இருப்போம். தேர்தல் பிரசாரத்திற்கு விழுப்புரம் வந்த பழனிசாமி வேட்பாளர்களின் பெயரை கூட சொல்லவில்லை. அன்று அதிமுக தோல்விக்கு காரணமானவர்களுக்கு இன்று கட்சியில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. சி.வி.சண்முகத்தால் தான் அதிமுக வேட்பாளர்கள் தோற்றனர் என்று கூறுவதையும், அவதூறு பரப்புவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்தல் செலவுக்கு அதிமுக தலைமையிலிருந்து பணம் எதுவும் கொடுக்கவில்லை. திண்டிவனத்தில் அதிமுக வெற்றிபெற்று இருந்தால் தமிழக அரசியல் சூழலே மாறி இருக்கும். ஏற்கனவே 1150 அதிமுக நிர்வாகிகள் பதவியை ராஜினாமா செய்தார்கள். இரண்டாம் கட்டமாக 2500 நிர்வாகிகள் அதிமுக பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளனர். பழனிசாமி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவர்களை அழைத்து தோல்விக்கான காரணம் குறித்து கேட்டறியவில்லை.
ரூ.10 கோடியில் இருந்து ரூ.15 கோடி இருந்தால் தான் ஒரு வேட்பாளருக்கு சீட் தருவோம் என்று கூறினார்கள். தலைமையில் இருந்து பொருளாதார உதவி செய்திருந்தால் நாங்கள் வென்றிருப்போம். சோம்பு அரசன் என்று என்னை கூறினார்கள். நான் விசுவாசமாக உள்ளேன். கட்சி வேணும், எங்களுக்கு பதவி வேண்டாம், தொடர்ந்து கட்சியில் பயணிப்போம், வேற எந்த கட்சிக்கும் போக மாட்டோம். தோற்ற வேட்பாளரை அழைத்து தோல்விக்கான காரணங்களை கேட்கவில்லை. கட்சியில் இருந்து வெளியே போனவர்கள் முதலில் இருந்து உறுப்பினராக தொடர வேண்டும். ஆனால் பசுபதி நேரடியாக உறுப்பினர் ஆகாமல் மாவட்ட செயலாளர் ஆனார். 25.03.2025 அன்று அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பசுபதியை நீக்கியது எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு கூறினார். அப்போது முன்னாள் சேர்மன் வெங்கடேசன், வழக்கறிஞர்கள் ரூபன்ராஜ், ஜெயபிரகாஷ் உடனிருந்தனர்.
