அடுத்த 4 நாளுக்கு மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வட கடலோரப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

வருகிற 31ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் மலை பகுதிகள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் 30ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வேலூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, வானம் இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இந்நிலையில், தமிழகத்தில் 12 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், திருச்சி, நாகப்பட்டினம், கடலூர், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், தஞ்சாவூர், திருத்தணி, பாளைங்கோட்டை, பரங்கிப்பேட்டை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெயில் நேற்று சதம் அடித்துள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: