2026-27ம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.16.75 லட்சம் கோடியாக இருக்கும்: பாமக சார்பில் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் எச்சரிக்கை

சென்னை: ஆண்டுதோறும் பாமக வெளியிடும் நிழல் நிதி அறிக்கை இன்று வெளியிடப்படப்படுகிறது. அதையொட்டி பாமக சார்பில் பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. பாமக வெளியிட்ட உத்தேச பொருளாதார அறிக்கையின் சில அம்சங்கள்: 2025-26ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் எதிர்பார்க்கப்பட்டதைவிட குறைந்துள்ளது. சொந்த வரி வருவாய் வரவுகள் ரூ.2,20,895 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், 13% குறைவாக ரூ.1,92,493.07 கோடி மட்டுமே வரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் அரசின் நேரடிக் கடன் ரூ.10 லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2026-27ம் ஆண்டின் முடிவில் அரசின் நேரடிக் கடன் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டும். மின்சார வாரியத்திற்கு மட்டும் ரூ.60,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 2026-27ம் ஆண்டில் ரூ.15,000 கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும் என்பதால் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த கடன் ரூ.5.75 லட்சம் கோடியாக இருக்கும்.

தமிழக அரசின் நேரடிக் கடன், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ஆகிய இரண்டையும் சேர்த்தால் தமிழக அரசின் மொத்தக் கடன் ரூ.16.75 லட்சம் கோடியாக இருக்கும். ஒவ்வொருவரின் பெயரிலும் ரூ.2,14,743 கடன் இருக்கும். 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.8,58,974.35 அரசு கடன் வாங்கியிருக்கும். ஊதியம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி உள்ளிட்ட பொறுப்பேற்றுக் கொண்ட செலவுகளின் அளவை இப்போதுள்ள 61.70 விழுக்காட்டில் இருந்து, 50 விழுக்காட்டுக்கும் கீழ் குறைக்க வேண்டும்.

தமிழக அரசின் அனைத்துத் துறைகளுக்குமான நிர்வாகச் செலவுகள் 15% குறைக்கப்படும். தமிழ்நாட்டிற்குள் முதலமைச்சர் தவிர்த்த பிற அமைச்சர்கள் விமானப் பயணம் மேற்கொள்வது தடை செய்யப்படுகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள், அரசுத் துறைகள் ஆகியவற்றுக்கு புதிய வாகனங்கள் வாங்க தடை விதிக்கப்படுகிறது. மாநில அரசு நிதி வலிமையைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமானால், வரி அல்லாத வருவாய் ஆதாரங்களைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். அதன் மூலம் தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் தேவையான திட்டங்களை தமிழ்நாடு அரசு தன்னிச்சையாக செயல்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: