அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் மீண்டும் வரும் 30ம் தேதி விசாரணை

சென்னை: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் மீண்டும் வரும் 30ம் தேதி விசாரணை நடக்கிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, அதிமுக மூன்றாவது இடத்தை பெற்றது. சட்டப்பேரவையில் தவெக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது அதிமுகவினர் 2 பிரிவாக செயல்பட்டனர். எடப்பாடி தரப்பினர் தவெக அரசுக்கு எதிராகவும், ஒரு தரப்பினர் தவெக அரசுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.

ஒரு கட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்களான இசக்கி சுப்பையா, சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அடுத்த நிமிடமே தவெக உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி தவெகவினர் இழுத்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக சபாநாயகரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த 4 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 முன்னாள் எம்எல்ஏக்களிடம் இரண்டு முறை சபாநாயகர் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணை தொடர்பாக அதிமுக சார்பாக சபாநாயகரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. விசாரணையில் அந்த 4 எம்எல்ஏக்கள் என்ன சொன்னார்கள் என்ற தகவலை தங்களுக்கு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் சட்டமன்ற அதிமுக கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், சட்டப்பேரவை செயலாளர் மூலமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தாங்கள் 13.5.2026ம் நாளன்று அளித்த தகுதி நீக்க மனு தொடர்பாக, நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த பதில்கள் மீது கூடுதல் விளக்கம் தேவைப்பட்டதால், கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல் விதிகளில் விதி 7(7)-ன் கீழ், பேரவைத் தலைவர் 3.7.2026 அன்று இசக்கி சுப்பையா, சத்யபாமா, எஸ்.ஜெயக்குமார் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோரையும் நேரில் அழைத்து விளக்கம் கோரப்பட்டது.

இதனையடுத்து ஜூலை 9ம் தேதி நடைபெற்ற விசாரணையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பேரவைத் தலைவர் இரு தரப்பினரையும் அழைத்து மேலும் சில விளக்கங்களை கோர விரும்புவதால், பேரவைத் தலைவர் அறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, அச்சமயத்தில் அவர்கள் விளக்கம் அளிக்கையில், தாங்களும் நேரில் வந்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்கலாம்.

இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற 30ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணிக்குள் 4 முன்னாள் எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியும் நேரில் வந்து சபாநாயகரிடம் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: