சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே பைக்கில் இருந்து கீழே விழுந்த போது பின்னால் வந்த ஜேசிபி இயந்திரம் மோதி, முன்னாள் அதிமுக எம்எல்ஏ மகன் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, ஜேசிபி இயந்திரத்தை இயக்கியது 17 வயது ஆந்திர சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து கொலைக்கு நிகரான வழக்கில் இயந்திரத்தின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் செல்வம். முன்னாள் அதிமுக எம்எல்ஏவான இவரது மகன் உலகபதி (22). இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் தங்கி கிண்டியில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். வழக்கம் போல் கடந்த 22ம் தேதி காலை கல்லூரிக்கு செல்ல மாணவன் உலகபதி பைக்கில் தனது நண்பனை அழைத்துக் கொண்டு திருவான்மியூர் பகுதியில் இருந்து கிண்டி நோக்கி சென்றார்.
அண்ணா பல்கலைக்கழகம் அருகே வரும் போது, பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த உலகபதி மற்றும் அவரது நண்பர் சாலையில் விழுந்தனர். அப்போது பின்னால் வந்த ஜேசிபி இயந்திரம் சட்டக்கல்லூரி மாணவன் உலகபதி மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த மற்றொரு மாணவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய ஜேசிபி இயந்திர டிரைவர் ராஜேஷ் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் திடீர் திருப்பதாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ மகன் மீது ஜேசிபி இயந்திரத்தை மோதியது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
அன்றைய தினம் இயந்திரத்தை டிரைவர் ராஜேஷ் இயக்காமல் உடன் இருந்த 17 வயது சிறுவன் இயக்கியதும், அவர் அதிவேகமாக இயந்திரத்தை இயக்கியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது எனவும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்தியது சிறுவன் என்று தெரிந்தும், போலீசார் முறையாக அன்று விசாரணை நடத்தாமல் இயந்திரத்தின் டிரைவர் ராஜேஷை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ மகன் சாலையில் கீழே விழுந்த போது, ஜேசிபி இயந்திரத்தை ஏற்றி இறக்கியது 17 வயது சிறுவன் என தெரியவந்தது.
அற்கான சிசிடிவி காட்சிகளையும் பலமுறை ஆய்வு செய்து போலீசார் அதை உறுதி செய்தனர். பின்னர் போலீசார் இயந்திரத்தை இயக்கிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும், சிறுவன் இயந்திரத்தை இயக்கியதால் இயந்திரத்தின் உரிமையாளரான ராசகுமார் மீது கொலைக்கு நிகரான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவனை கூர்நோக்கு பள்ளியிலும், ராசகுமாரை போலீசார் புழல் சிறையிலும் அடைத்தனர்.
