புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத், யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக யுனெஸ்கோ தனது எக்ஸ் தளப் பதிவில், ‘யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் புதிய இணைப்பு: இந்தியாவில் உள்ள பழமையான புத்தத் தலமான சாரநாத்’ என்று தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாரநாத், உலகம் முழுவதிலும் உள்ள பவுத்தர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு புனித யாத்திரைத் தலமாகும்.
கவுதம புத்தர் தனது முதல் போதனையை வழங்கிய இடமாக, வரலாற்றில் இது இடம் பெற்றுள்ளது. யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,’ உத்தரப் பிரதேசத்தில் உள்ள சாரநாத் யுனெஸ்கோ உலக பாரம்பரியப் பட்டியலில் இணைக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது உலகம் முழுவதும் உள்ள அதிகமான மக்களை சாரநாத்திற்கு வர ஊக்குவிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
