புதுச்சேரி: பாமகவில் அதிருப்தியில் இருந்த சேலம் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். இதையடுத்து ரங்கசாமி, தனது கட்சியின் தமிழக தலைவராக அருளை அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தமிழகத்திலும் என்ஆர் காங்கிரஸ் விரிவுபடுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து, வேலூர், கடலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கட்சியில் இணைந்தனர்.
ஆனால், அவர்களுக்கு எந்த பொறுப்பும் தரவில்லை. அண்மையில் தவெகவுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட முடிவு செய்திருந்தார். ஆனால், பாஜ கூட்டணி அழுத்தம் காரணமாக அது நடக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ராமதாஸ்-அன்புமணி மோதல் முடிவுக்கு வந்ததையடுத்து, ராமதாஸ் அணியில் இருந்த முன்னாள் எம்எல்ஏ அருள் மற்றும் முக்கிய நிர்வாகிகள், முதல்வர் ரங்கசாமியை, புதுவையில் உள்ள தனியார் ஓட்டலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது தமிழகத்திலும் என்ஆர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது. இந்த கூட்டத்தில், என்ஆர் காங்கிரசில் அருள் இணைவது உறுதி செய்யப்பட்ட நிலையில், வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னையில் பிரமாண்ட விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் என்ஆர் காங்கிரஸ் அறிமுக விழா, நிர்வாகிகள் இணைப்பு விழா, முதல்வர் ரங்கசாமி பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக நடக்க இருக்கிறது.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் என்ஆர் காங்கிரஸ் தலைவராக முன்னாள் எம்எல்ஏ அருள் அறிவிக்கப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு புதுச்சேரி முன்னாள் அமைச்சர் லட்சுமிநாராயணன் பொறுப்பு தலைவராக இருப்பார் என்று தெரிகிறது. இது குறித்து அருளிடம் கேட்டபோது, ‘‘என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை, நான் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். நான் என்.ஆர். காங்கிரசில் இணைவதாக தகவல்கள் வந்து ெகாண்டிருக்கிறது. இது சம்பந்தமாக நான் முடிவு ஏதும் எடுக்கவில்லை. அப்படி இணைந்தால், அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்,’’ என்றார்.
