சென்னை: காவிரி மற்றும் மேகதாது பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், என முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அணை நிரம்பினால்தான் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும் என்று கர்நாடக அரசு கூறுவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானதாகும்.
சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்து தண்ணீரை பெற வேண்டிய தவெக-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வர் இன்றுவரை வாய்மூடி மவுனியாக இருக்கிறார். உச்ச நீதிமன்றம், 2012ம் ஆண்டு காவிரி பிரச்னை குறித்து மீண்டும் ஒருமுறை கர்நாடகாவோடு தமிழகத்தின் முதல்வர் பேச வேண்டும் என்ற ஒரு யோசனையை தெரிவித்தது. அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா, கர்நாடக அரசோடு பேசி பயனில்லை என்றாலும், உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை ஏற்று கர்நாடக முதல்வரோடு ஒருமுறை பேசுகிறேன் என்று அறிவித்தார்.
அதன்படி 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி ஜெயலலிதா பெங்களூரு சென்று அப்போதைய கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் துறை அமைச்சர்களுடன் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த ஜெயலலிதா, ‘தமிழகத்தின் உண்மை நிலையை கர்நாடக அரசில் உள்ளவர்கள் எப்போதுமே புரிந்துகொள்வதில்லை. உச்ச நீதிமன்றம் ஒரு நல்லது நடக்கும் என்ற நினைப்பில் பேச்சுவார்த்தை நடத்த சொன்னதால், நான் இங்கு வந்தேன்.
பேசியதில் எந்த பயனும் இல்லை என்றார். இது நடந்து 14 வருடங்கள் ஆனபின்னரும் `தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்று கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்கள் அடம் பிடிக்கிறார்கள். தற்போது, `தமிழக முதல்வர், காவிரி பிரச்னையில் பேச்சுவார்த்தைக்காக கர்நாடக முதல்வரை சந்திக்க போகிறேன்’ என்று சொன்ன பிறகு, ‘யார் வேண்டுமானாலும் வரட்டும், யாரோடும் நாங்கள் பேசத் தயார், எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை’ என்று கர்நாடகாவின் காங்கிரஸ் முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
மேகதாது விவகாரம் குறித்து தமிழக முதல்வர் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்களது கருத்துகளை கேட்டும்; டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடைய கருத்துகளை கேட்டறிந்தும், பிறகு அனைவரது கருத்துகளின் அடிப்படையில் சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். எனவே, உடனடியாக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
