நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரில் ஆதரவு: மெரினாவை திறந்து விடு என மாணவர்கள் கோஷம்

சென்னை: சென்னை தி.நகர் பாலன் இல்லத்தில் இளைஞர்களின் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் நேற்று நேரில் ஆதரவு தெரிவித்தார். அப்போது மாணவர்கள் மெரினாவை திறந்து விடு, திறந்து விடு என்று கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

காக்ரோச் ஜனதா கட்சி நடத்தி வரும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற பலரும், ஆட்சிக்கு வருதற்கு முன் முதல்வர் விஜய், நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு மவுனம் காப்பதாகவும், மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவதாகவும், மாணவர்கள் போராட்ட களத்தில் இருக்கும் போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஜனநாயகன் திரைப்படம் பார்த்து ரசிப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், நேற்று 6வது நாளாக நடந்த இந்த போராட்டத்தில், பள்ளி கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்று, ஆதரவு தெரிவித்தார். அப்போது, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று ‘மெரினாவை திறந்து விடு, மெரினாவை திறந்து விடு’ என்று கோஷங்களை எழுப்ப தொடங்கினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மைக்கை எடுத்து பேச தொடங்கினார்.

அப்போது அவரை பேச விடாமல், மாணவர்கள் கோஷம் எழுப்பினர். இருந்த போதிலும் அமைச்சர் ராஜ்மோகன் தனது பேச்சை தொடங்கினார். சிறிது நேரத்தில் மாணவர்கள் அமைதியாகினர். இதில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், ‘நீங்கள் சாதாரண கரப்பான் பூச்சிகள் கிடையாது. மெல்ல அரிக்கும் கரையான்கள்.

இது தொடர்பான அனைத்து முடிவுகளையும் இடம், காலம் எல்லாவற்றையும் நீங்களே எடுங்கள். நாங்கள் ஆதரவை தருகிறோம். உங்கள் போராட்டம் தொடரட்டும். யாருக்கும் செவிசாய்க்காத டெல்லியை செவிசாய்க்க வைத்து இருக்கிறீர்கள். உங்களை தலை வணங்குகிறேன். தம்பிகளா, தங்கைகளா இது உங்களின் போராட்டம். உங்கள் போராட்டம் ஓங்கட்டும். உங்கள் அனைவருக்கும் புரட்சிக்கர வாழ்த்துகள்,’ என்றார்.

* கொண்டாட்டம்
மாணவர்கள் போராட்டத்திற்கு அடிபணிந்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ராஜினாமா செய்ததை தொடர்ந்து, தி.நகர் பாலன் இல்லத்தில் 6வது நாளாக போராடி வரும் போராட்டக்காரர்கள் வெற்றி முழக்கமிட்டு உற்சாகமாக கொண்டாடினர். மேலும், அடுத்த 2 நாட்களில் நீட் ரத்து என்ற அறிவிப்பை கேட்கவிருக்கிறோம், அதுவரை போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: