பாமகவை அன்புமணி பார்த்துக் கொள்வார் இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்: ராமதாஸ் திடீர் அறிவிப்பு

திண்டிவனம்: பாமகவை அன்புமணி பார்த்து கொள்வார். இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன், அதாவது அரசியிலில் இருந்து விலகுகிறேன் என ராமதாஸ் திடீர் என அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே 2024 டிசம்பரில் மாநில இளைஞரணி தலைவராக பேரன் முகுந்தனை அறிவித்தபோது மோதல் வெடித்தது. அதன்பிறகு தந்தை, மகன் இடையிலான விரிசல் படிப்படியாக அதிகரிக்க அன்புமணியை கடுமையாக விமர்சித்த ராமதாஸ் அவரை தலைவர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்குவதாக அறிவித்தார்.

ஆனால் அன்புமணியோ, நான் பாமக கட்சி விதிகளின்படி தலைவர் என தேர்தல் ஆணையத்தில் முறையிட இவ்விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இருதரப்பும் பாமக கட்சி, சின்னத்துக்கு உரிமை கோரி நீதிமன்றங்களை நாடிய நிலையில், அன்புமணி தான் பாமக என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனால் 2 அணிகளாக பாமக தேர்தலை சந்தித்தது. இதில் அன்புமணி பாமக 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ராமதாஸ் அணி படுதோல்வி அடைந்தது.

அதன்பிறகு ராமதாஸ், அரசியல் குறித்தும், மக்கள் நலத்திட்ட பிரச்னைகள் குறித்தும் அவ்வப்போது அறிக்கை மட்டுமே வெளியிட்டபடி இருந்தார். இதையடுத்து, ராமதாஸ்- சரஸ்வதியின் திருமண நாளையொட்டி அன்புமணி குடும்பத்தினருடன் தைலாபுரம் வந்து சந்தித்து ஆசி பெற்றார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் தனியார் கல்லூரியில் ராமதாசின் 88வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, கல்லூரி நிறுவனர் சரஸ்வதி அம்மாள், தர்மபுரி எம்எல்ஏ சவுமியா அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் ராமதாஸ் பேசியதாவது: கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு தலைசுற்றல் வியாதி உள்ளது. இதனால் யாரிடமும் சரியாக பேச முடியவில்லை. இருந்தபோதிலும் எனக்கு 88வது பிறந்தநாள். இதை கல்லூரியில் மாணவர்களுடன் கொண்டாட வேண்டுமென ஆசைப்பட்டேன்.

உங்கள் மத்தியில் முக்கியமான ஒரு அறிவிப்பை நான் வெளியிடுகிறேன். அதாவது நான் அரசியலில் இருந்து இன்று முதல் துறவறம் மேற்கொள்கிறேன். துறவறம் என்றால் இனி நான் அரசியல் பேச மாட்டேன். என்னை காண வருபவர்களை சந்திப்பேன், பேசுவேன். அரசியல் சம்பந்தமாக இனி நான் யாரிடமும் எதையும் பேச மாட்டேன். பாமக அரசியலை இனி முழுமையாக அன்புமணி பார்த்துக் கொள்வார் என்றார்.

* என்.ஆர்.காங்கிரசில் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி இணைந்தார்
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீதான கோபத்தில் மகன் ஸ்ரீகாந்தியை செயல் தலைவராக அறிவித்து இருந்தார். இப்போது மீண்டும் அன்புமணியுடன் இணைந்துவிட்டார். இந்நிலையில் ராமதாசின் மகளும் முன்னாள் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, பேரன் முகுந்தன் ஆகியோர் நேற்று ராமதாசின் பிறந்தநாள் விழாவை புறக்கணித்துவிட்ட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து என்.ஆர் காங்கிரசில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று ரங்கசாமி விபூதி பூசி ஆசி வழங்கினார். விரைவில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த பாமக நிர்வாகிகள் பலர் தங்களை பின்பற்றி என்.ஆர் காங்கிரசில் இணையவுள்ளதாக ரங்கசாமியிடம் ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.

* தவெக அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம்
பாமக தலைவர் அன்புமணி அளித்த பேட்டியில், மேகதாது விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகாவுக்கு செல்ல கூடாது. பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரை சந்திக்க வேண்டும். தமிழக அமைச்சரவையில் நாங்கள் இடம் பெற மாட்டோம், அப்படி நிர்வாகி ஒருவர் கூறியிருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்போம். தமிழக கனிமவளக்கொள்ளை குறித்து சிபிஐ விசாரனை செய்ய வேண்டும். அரசியல்ல ஓய்வுன்னு யாருக்கும் இருக்காது. பாமக நிறுவனரின் வழிகாட்டுதல், ஆலோசனைகள் எல்லாம் எங்களுக்கு இருக்கும் என்றார்.

Related Stories: