10 இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்தது தமிழகத்தில் 29ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று 10 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், 29ம் தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்த போதும் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது.

குறிப்பாக சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய பகுதிகளில் வெயில் சதம் அடித்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் 29ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: